பா.ஜனதா செயற்குழு கூட்டம் முடிந்தவுடன் கர்நாடக மந்திரிசபை விரிவாக்கம்; பசவராஜ் பொம்மை பேட்டி
பா.ஜனதா செயற்குழு கூட்டம் முடிந்த பிறகு கர்நாடக மந்திரிசபை விரிவாக்கம் செய்யப்படும் என்று முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை தெரிவித்துள்ளார்.
பெங்களூரு:
ஜே.பி.நட்டா ஒப்புதல்
கர்நாடகத்தில் பசவராஜ்பொம்மை தலைமையில் பா.ஜனதா ஆட்சி நடந்து வருகிறது. அவரது தலைமையிலான மந்திரி சபையில் மொத்தம் 34 இடங்கள் உள்ளன. இதில் தற்போது 4 மந்திரி பதவி காலியாக உள்ளன. மேலும் சில மந்திரிகளின் செயல்பாடுகள் சரியாக இல்லை. இதனால் காலி பணியிடங்களை நிரப்பவும், சரியாக செயல்படாத மந்திரிகளை கழற்றிவிடவும் பசவராஜ்பொம்மை முடிவு செய்துள்ளார். அடுத்த ஆண்டு (2023) கர்நாடக சட்டசபைக்கு தேர்தல் நடைபெற உள்ளதால், கர்நாடக மந்திரிசபை மாற்ற பா.ஜனதா மேலிடமும் திட்டமிட்டுள்ளது.
இந்த நிலையில், முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை 3 நாட்கள் சுற்றுப்பயணமாக கடந்த 5-ந்தேதி டெல்லிக்கு புறப்பட்டு சென்றிருந்தார். டெல்லியில் நடந்த பா.ஜனதா நிறுவன தினத்தையொட்டி நடந்த நிகழ்ச்சியில் அவர் கலந்து கொண்டார். மேலும் மத்திய மந்திரிகளான நிர்மலா சீதாராமன், ராஜ்நாத் சிங், கஜேந்திர சிங் செகாவத்தை சந்தித்து, கர்நாடக மாநில வளர்ச்சி மற்றும் மேகதாதுவில் அணைகட்டும் விவகாரம் குறித்தும் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை ஆலோசனை நடத்தி இருந்தார்.
அத்துடன் நேற்று முன்தினம் டெல்லியில் பா.ஜனதா தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவை, அவர் சந்தித்து பேசினார். அப்போது மந்திரிசபை விரிவாக்கம் குறித்து ஜே.பி.நட்டாவுடன், பசவராஜ் பொம்மை ஆலோசனை நடத்தினார். அந்த சந்தர்ப்பத்தில் மந்திரிசபை விரிவாக்கம் செய்ய முதல்-மந்திரி பசவராஜ் பொம்மைக்கு, ஜே.பி.நட்டா ஒப்புதல் அளித்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதுகுறித்து டெல்லியில் நேற்று பசவராஜ் பொம்மையிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பினார்கள். இதற்கு பதிலளித்து அவர் கூறியதாவது:-
மந்திரிசபை விரிவாக்கம்
கர்நாடக மந்திரிசபை விரிவாக்கம் செய்வது குறித்து கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவை சந்தித்து ஆலோசனை நடத்தினேன். கர்நாடக அரசியல் உள்ளிட்ட அனைத்து விவகாரங்கள் பற்றியும் அவருடன் ஆலோசித்தேன். அவரும் மந்திரிசபை விரிவாக்கம் செய்ய அனுமதி வழங்கி இருக்கிறார். கர்நாடக மாநில பா.ஜனதா செயற்குழு கூட்டம், வருகிற 16 மற்றும் 17-ந் தேதிகளில் நடைபெற உள்ளது. இந்த செயற்குழு கூட்டத்தில் மந்திரிசபை விரிவாக்கம் குறித்து விரிவாக ஆலாசனை நடத்தப்படும்.
மந்திரிசபை விரிவாக்கம் செய்வதா?, அல்லது மந்திரிசபையை மாற்றி அமைப்பதா? என்பது குறித்து விரிவாக ஆலோசித்து முடிவு செய்யப்படும். கர்நாடகத்தில் நடைபெறும் செயற்குழு கூட்டத்தில் பங்கேற்கும்படி ஜே.பி.நட்டாவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. செயற்குழு கூட்டத்தில் பி.எல்.சந்தோஷ் மற்றும் முக்கிய தலைவர்களுடன் ஆலோசனை நடத்திய பின்பு, மந்திரிசபை விரிவாக்கம் செய்வதற்கான தேதி இறுதி செய்யப்பட்டு அறிவிக்கப்படும்.
மத்திய மந்திரிகள் உதவி
கர்நாடகத்தில் வருகிற 2023-ம் ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. சட்டசபை தேர்தல் நடைபெற இருப்பதால் மந்திரிசபையை விரிவாக்கம் செய்ய அனுமதி அளிக்க வேண்டும் என்று கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவுடனான சந்திப்பின் போது, நானும் வலியுறுத்தினேன். சட்டசபை தேர்தல் நடைபெற இருப்பதால், கட்சியை அடிமட்டத்தில் இருந்து முன்னெடுத்து செல்லும்படி அவரும், எனக்கு சில அறிவுரைகளை வழங்கினார். நாடாளுமன்ற கூட்டத்தொடர் நடைபெற்று வருவதால், மத்திய உள்துறை மந்திரியான அமித்ஷாவை சந்தித்து பேச முடியவில்லை.
மத்திய மந்திரிகளான நிர்மலா சீதாராமன், ராஜ்நாத்சிங், கஜேந்திரசிங் செகாவத் மற்றும் மூத்த தலைவர்களை சந்தித்து பேசினேன். மத்திய மந்திரிகளுடன் நடந்த சந்திப்பின் போது மாநில வளர்ச்சி குறித்து விரிவாக ஆலோசனை நடத்தினேன். அவர்களும், கர்நாடக மாநிலத்தின் வளர்ச்சிக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்து கொடுக்க தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளனர்.
டெல்லி பயணம் வெற்றி
மாநிலத்திற்கு வர வேண்டிய ஜி.எஸ்.டி. பாக்கி தொகை, ரெயில்வே திட்டங்களுக்காக வர வேண்டிய நிவாரணம் உள்ளிட்ட மாநில வளர்ச்சி திட்டங்களுக்கான நிவாரணத்தை ஒதுக்குவதாக மத்திய மந்திரிகள் தெரிவித்துள்ளனர். பா.ஜனதா நிறுவன தினத்தையொட்டி கட்சியின் தலைமை அலுவலகத்திற்கு சென்று, அங்கு நடந்த நிகழ்ச்சிகளில் பங்கேற்றது மிகுந்த மகிழ்ச்சியை அளித்துள்ளது.
எனது டெல்லி பயணம் வெற்றிகரமாக நிறைவு பெற்றுள்ளது. இந்த பயணம் முழு திருப்தியை கொடுத்திருக்கிறது. அமித்ஷாவை மட்டும் சந்திக்க முடியவில்லை. சரியான நேரம் கிடைக்கும் போது, அவரையும் சந்தித்து ஆலோசனை நடத்துவேன்.
இவ்வாறு பசவராஜ் பொம்மை கூறினார்.
எம்.எல்.ஏ.க்கள் உற்சாகம்
கர்நாடக மந்திரிசபை விரிவாக்கம் செய்ய பா.ஜனதா மேலிடம் அனுமதி வழங்கி இருப்பதால், மந்திரிபதவியை எதிர்பார்த்து காத்திருக்கும் எம்.எல்.ஏ.க்கள் உற்சாகம் அடைந்துள்ளளனர். ஆனால் அடுத்த ஆண்டு (2023) நடைபெற இருக்கும் சட்டசபை தேர்தலையொட்டி மந்திரிசபை விரிவாக்கத்திற்கு பதிலாக மந்திரிசபை மாற்றியமைக்கப்படும் என்ற தகவல்கள் வெளியாகி உள்ளது.
அதாவது சரியாக செயல்படாத மந்திரிகளை நீக்கிவிட்டு புதியவர்களுக்கு வாய்ப்பளிக்கப்படும் என்று தகவல்கள் வெளியாகி இருக்கிறது. சில மூத்த மந்திரிகளையும் நீக்கிவிட்டு, அவர்களை கட்சி பணியில் தீவிரமாக ஈடுபட பா.ஜனதா மேலிடம் தீர்மானித்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.
Related Tags :
Next Story