‘தினத்தந்தி’ புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்


‘தினத்தந்தி’ புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்
x
தினத்தந்தி 8 April 2022 3:17 AM IST (Updated: 8 April 2022 3:17 AM IST)
t-max-icont-min-icon

‘தினத்தந்தி‘ புகார் பெட்டிக்கு 89390 48888 என்ற ‘வாட்ஸ்-அப்‘ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

குண்டும், குழியுமான சாலை
தாளவாடியில் இருந்து ஒசூர் வழியாக பாரதிபுரத்துக்கு செல்ல ரோடு ஒன்று உள்ளது. இந்த ரோடு மிகவும் பழுதடைந்து குண்டும், குழியுமாக காட்சி அளிக்கிறது. இதனால் அந்த ரோட்டின் வழியாக வாகனங்கள் செல்ல முடியாத நிலை உள்ளது. இதன்காரணமாக வாகன ஓட்டிகள் மிகவும் அவதிப்படுகின்றனர். நடந்து செல்பவர்களும் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே ரோட்டை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். 
பொதுமக்கள், தாளவாடி.

ரோட்டில் சுற்றித்திரியும் குதிரைகள்
அந்தியூர் தவுட்டுப்பாளையம் பகுதிகளில் ரோட்டில் 10-க்கும் மேற்பட்ட குதிரைகள் சுற்றி திரிகின்றன. அவைகள் ஒன்றோடொன்று சண்டையிட்டு கொண்டு ரோட்டில் திடீரென்று ஓடுகின்றன. இதனால் ரோட்டில் செல்லும் வாகன ஓட்டிகளுக்கு குதிரைகளால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுகிறது. குறிப்பாக இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் திடீரென குறுக்கே ஓடும் குதிரைகளால் கீழே விழுந்து காயம் அடைகிறார்கள். எனவே ரோட்டில் சுற்றித்திரியும் குதிரைகளை பிடித்து அப்புறப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். 
பொதுமக்கள், அந்தியூர்.

சாலையில் பள்ளம்
ஈரோடு சென்னிமலைரோடு ரெயில்வே டீசல் என்ஜின் பணிமனை பகுதியில் தரைப்பாலம் கட்டுவதற்காக பள்ளம் தோண்டப்பட்டது. இந்த பணிகள் நீண்ட நாட்களாக கிடப்பில் போடப்பட்டு உள்ளதால், பள்ளம் மூடப்படாமல் உள்ளது. வாகன ஓட்டிகளுக்கு பள்ளம் இருப்பதை எச்சரிக்கும் வகையில் அங்கு பேரிகார்டர் வைக்கப்பட்டு உள்ளது. எனவே விபத்து ஏற்பட்டு அசம்பாவித சம்பவம் ஏற்படுவதற்கு முன்பு பள்ளத்தை விரைந்து மூட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
காயத்திரி, ஈரோடு.

ஓடை தூர்வாரப்படுமா? 
ஈரோடு சாஸ்திரி நகர் நால்ரோடு சந்தை பகுதியில் இருந்து லெனின் வீதி பகுதியில் ஓடை செல்கிறது. ரெயில்வே காலனியை ஒட்டி செல்லும் இந்த ஓடையில் செடி, கொடிகள் படர்ந்து காடு போல காட்சி அளிக்கிறது. மேலும், பொதுமக்கள் அந்த ஓடையில் குப்பையை கொட்டுவதால் சுகாதாரக்கேடு ஏற்படுகிறது. இந்த ஓடையை சீரமைத்து தூர்வாருவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். குப்பைகளை கொட்டாமல் இருக்கும் வகையில் உயரமான தடுப்புச்சுவர் அமைக்க வேண்டும்.
பிரகாஷினி, சாஸ்திரிநகர்.

பாராட்டு
கோபி அக்ரகாரம் பகுதியில் உள்ள ஒரு பள்ளிக்கூடம் அருகே காய்ந்த செடி, கொடிகள், தென்னை இலைகள் ஆகியவைகள் குப்பைகளாக குவிக்கப்பட்டு கிடந்தன. இதுபற்றிய செய்தி தினத்தந்தி நாளிதழின் ‘புகார் பெட்டி’ பிரிவில் பிரசுரிக்கப்பட்டிருந்தது. இதைத்தொடர்ந்து நகராட்சி ஊழியர்கள் அக்கரகாரம் பகுதிக்கு சென்று குவிந்து கிடந்த குப்பைகளை அகற்றி தூய்மைப்படுத்தினர். இதுகுறித்து செய்தி வெளியிட்ட தினத்தந்தி நாளிதழுக்கும், நகராட்சி நிர்வாகத்துக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறோம். 
பொதுமக்கள், கோபி.

Next Story