காகித ஆலை ஊழியர் வீட்டில் 10 பவுன் நகைகள்-பணம் திருட்டு


காகித ஆலை ஊழியர் வீட்டில் 10 பவுன் நகைகள்-பணம் திருட்டு
x
தினத்தந்தி 8 April 2022 4:29 AM IST (Updated: 8 April 2022 4:29 AM IST)
t-max-icont-min-icon

காகித ஆலை ஊழியர் வீட்டில் 10 பவுன் நகைகள்-பணத்தை மர்ம நபர்கள் திருடிச்சென்றனர்.

மணப்பாறை:

நகை-பணம் திருட்டு
திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த மரவனூரில் வசித்து வருபவர் சாவித்திரி. இவரது மகன் மணிகண்டன். மொண்டிபட்டியில் உள்ள தமிழ்நாடு காகித ஆலையில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி ஜெயப்பிரியா மணப்பாறை அரசு மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றி வருகிறார். நேற்று முன்தினம் இரவு வழக்கம்போல் மணிகண்டன் உள்ளிட்டோர் வீட்டில் ஒரு அறையில் தூங்கிக் கொண்டிருந்தனர்.
நள்ளிரவில் வீட்டிற்குள் புகுந்த மர்மநபர்கள் வீட்டின் பின்பக்க கதவின் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்து மணிகண்டன் தூங்கிக் கொண்டிருந்த அறையின் முன்பக்க கதவை பூட்டியுள்ளனர். பின்னர் வீட்டில் இருந்த பீரோவை அருகில் உள்ள பகுதிக்கு தூக்கிச்சென்று, அதில் இருந்த சுமார் 10 பவுன் நகைகள் மற்றும் ரூ.10 ஆயிரம், ரூ.3 ஆயிரம் மதிப்பிலான வெள்ளி சிலை மற்றும் ஆவணங்கள் ஆகியவற்றை திருடிச் சென்றனர்.
போலீசார் விசாரணை
இந்நிலையில் மணிகண்டன் எழுந்து அறையின் கதவை திறக்க முயன்றபோது, அதனை திறக்க முடியாததால் இதுபற்றி தனது நண்பருக்கு தகவல் கொடுத்துள்ளார். அவர் அங்கு வந்து பார்த்தபோது வீட்டின் கதவு திறந்திருந்ததுடன் மணிகண்டன் அறையின் கதவு மட்டும் முன்பக்கம் தாழிடப்பட்டிருந்தது. இதையடுத்து அவர் அந்த அறையின் கதவை திறந்து விட்டார். இதையடுத்து மணிகண்டன் வீட்டில் பார்த்தபோது, அங்கு பீரோ இல்லாதது தெரியவந்தது. இதையடுத்து அருகில் உள்ள பகுதியில் பீரோ கிடந்ததும், அதில் இருந்த நகை, பணம் திருடப்பட்டிருந்ததும், தெரியவந்தது. இது குறித்து மணப்பாறை போலீசாருக்கு அளிக்கப்பட்ட தகவலின்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். மேலும் கைரேகை நிபுணர்கள் வந்து கைரேகைகளை சேகரித்தனர். திருட்டு சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story