மாணவியிடம் செல்போனில் ஆபாசமாக பேசியதாக கல்லூரி பேராசிரியர் கைது
மாணவியிடம் செல்போனில் ஆபாசமாக பேசியதாக கல்லூரி பேராசியர் கைது செய்யப்பட்டார்.
செல்போனில் பேச்சு
பொன்னேரியில் உலகநாத நாராயணசாமி அரசினர் தன்னாட்சி கலைக்கல்லூரி செயல்பட்டு வருகிறது. இங்கு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். கல்லூரியில் ஆங்கில துறை உதவி பேராசிரியராக சென்னை அம்பத்தூரை சேர்ந்த மகேந்திரன்(வயது 59) பணியாற்றி வருகிறார்.
இவர் சில நாட்களுக்கு முன் 3-ம் ஆண்டு மாணவி ஒருவரை செல்போனில் தொடர்பு கொண்டு வீட்டுக்கு வா நட்புடன் பழகலாம் என்று அழைத்ததாக தெரிகிறது. இந்த ஆடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது. பாதிக்கப்பட்ட கல்லூரி மாணவி இதுகுறித்து கல்லூரி முதல்வர் சேகரிடம் புகார் செய்தார். அதன் பேரில் கல்லூரி முதல்வர் தலைமையில் குழு ஒன்று அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்றது.
இந்த நிலையில் நேற்று கல்லூரி மாணவ-மாணவிகள் ஒன்று கூடி போராட்டம் நடத்த முடிவு செய்தனர். பாதிக்கப்பட்ட கல்லூரி மாணவி பொன்னேரி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.
கைது
அதன்பேரில் இன்ஸ்பெக்டர் மகிதா அன்னகிருஷ்டி மற்றும் போலீசார் கல்லூரிக்கு சென்று உதவி பேராசிரியர் மகேந்திரனை கைது செய்து அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரித்தனர்.
இதையடுத்து, கல்லூரி மாணவ-மாணவிகள் கல்லூரி நுழைவாயில் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து கல்லூரி முதல்வர் மற்றும் அதிகாரிகள் மாணவ-மாணவிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.
பேராசிரியர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என தெரிவித்ததை தொடர்ந்து அனைத்து மாணவ, மாணவிகளும் கலைந்து சென்றனர்.
Related Tags :
Next Story