திண்டுக்கல், பழனியில் வாழைக்கன்று நட்டு சாலை பணியாளர்கள் நூதன போராட்டம்


திண்டுக்கல், பழனியில் வாழைக்கன்று நட்டு சாலை பணியாளர்கள் நூதன போராட்டம்
x
தினத்தந்தி 8 April 2022 8:40 PM IST (Updated: 8 April 2022 8:40 PM IST)
t-max-icont-min-icon

திண்டுக்கல், பழனியில் வாழைக்கன்று நட்டு சாலைப்பணியாளர்கள் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திண்டுக்கல்:

தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலை பணியாளர்கள் சங்கம் சார்பில், திண்டுக்கல் கோட்ட பொறியாளர் அலுவலக வளாகத்தில் கவன ஈர்ப்பு கூட்டம் நடைபெற்றது. இதற்கு சங்கத்தின் கோட்ட தலைவர் ராஜா தலைமை தாங்கினார். செயலாளர் சீனிவாசன் வரவேற்றார். மாநில துணை தலைவர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார்.
அப்போது 41 மாத பணி நீக்க காலத்தை பணிக்காலமாக அறிவிக்க வேண்டும். நெடுஞ்சாலை பராமரிப்பு பணிகளை அரசே ஏற்று நடத்த வேண்டும். இதற்காக கிராமப்புற இளைஞர்களுக்கு சாலை பணியாளர் வேலை வழங்க வேண்டும். மேலும் பணி காலத்தில் உயிரிழந்த பணியாளர்களின் வாரிசுகளுக்கு கருணை அடிப்படையில் வேலை வழங்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.

இதையடுத்து கோரிக்கைகளை வலியுறுத்தி கோட்ட பொறியாளர் அலுவலக வளாகத்தில் சாலை பணியாளர்கள் வாழைக்கன்றுகளை நட்டு நூதன முறையில் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் கோட்ட பொருளாளர் முருகேசன், துணை தலைவர்கள் ஜெயக்கொடி, சேகர், இணை செயலாளர்கள் அழகர்சாமி, முருகானந்தம், அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் விவேகானந்தன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

வாழையடி வாழையாய்...

இதேபோல் பழனி கோட்ட பொறியாளர் அலுவலக வளாகத்தில் வாழை மரக்கன்றுகள் நடும் போராட்டத்தில் சாலைப்பணியாளர்கள் ஈடுபட்டனர். இதற்கு மாநில பொருளாளர் தமிழ் தலைமை தாங்கினார். கோட்ட பொருளாளர் வீரையா, செயலாளர் மணிமாறன், தலைவர் நந்தகோபால் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பின்னர் கோட்ட பொறியாளர் அலுவலக வளாகத்தில் சாலைப்பணியாளர்கள் வாழை மரக்கன்றுகளை நட்டு, தண்ணீர் ஊற்றினர்.
பின்னர் அவர்கள், தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். இந்த போராட்டத்தில் சாலைப்பணியாளர்கள் சங்கத்தினர் பலர் கலந்துகொண்டனர். வாழையடி வாழையாய் தங்களை தழைத்தோங்க செய்திட வேண்டும் என்பதை வலியுறுத்தி இந்த போராட்டம் நடந்தது குறிப்பிடத்தக்கது. 

Next Story