விழுப்புரம்- புதுச்சேரி சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல்
டிராக்டரில் இருந்த நெல் மூட்டைகள் சரிந்து விழுந்ததால் விழுப்புரம்- புதுச்சேரி சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
விழுப்புரம்,
விழுப்புரம் ரெயில்வே மேம்பாலத்தில் இன்று காலை 8.30 மணியளவில் நெல் மூட்டைகளை ஏற்றிக்கொண்டு சென்ற டிராக்டரில் இருந்து நெல் மூட்டைகள் சரிந்து நடுரோட்டில் விழுந்தது. இதன் காரணமாக விழுப்புரம்- புதுச்சேரி சாலையில் வாகன போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இந்த போக்குவரத்து நெரிசலில் சிக்கி நகர பொதுமக்கள் மட்டுமின்றி பள்ளி- கல்லூரி செல்லும் மாணவ- மாணவிகளும் மிகவும் அவதியடைந்தனர்.
இதுகுறித்த தகவல் அறிந்ததும் போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் வசந்த் தலைமையிலான போலீசார் அங்கு விரைந்து சென்று நடுரோட்டில் விழுந்து கிடந்த நெல் மூட்டைகளை சாலையோரம் அப்புறப்படுத்தி காலை 9.15 மணியளவில் போக்குவரத்தை சீர்செய்தனர். விழுப்புரம் நகரில் நான்குமுனை சந்திப்பில் இருந்து பானாம்பட்டு சாலை சந்திப்பு வரை தினந்தோறும் பள்ளி நேரங்களில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. இதனை கட்டுப்படுத்த அவ்வப்போது போக்குவரத்து போலீசார் பல்வேறு முயற்சிகளை எடுத்தாலும் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த முடியவில்லை. இந்த போக்குவரத்து நெரிசலுக்கு மாற்று வழி ஏற்படுத்தி நிரந்தர தீர்வு காண மாவட்ட நிர்வாகமும், காவல்துறையும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், அதேநேரத்தில் கூடுதலாக போக்குவரத்து போலீசாரை பணியில் ஈடுபடுத்த வேண்டுமென நகர மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Related Tags :
Next Story