சுற்றுச்சுவரை இடித்துவிட்டு வீட்டுக்குள் புகுந்த கார்
நத்தம் அருகே சுற்றுச்சுவரை இடித்துவிட்டு வீட்டுக்குள் கார் புகுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
நத்தம்:
மதுரை சிக்கந்தர்சாவடியை சேர்ந்தவர் முத்துக்குமார் (வயது 32). இவர், கார் வாடகைக்கு விடும் தொழில் செய்து வருகிறார். நேற்று முன்தினம் மாலை இவர், மதுரையில் இருந்து நத்தம் நோக்கி காரில் வந்து கொண்டிருந்தார்.
நத்தம் அருகே புதுக்கோட்டை முடக்கு சாலை பகுதியில் அவர் வந்தபோது, கார் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடியது. ஒருகட்டத்தில் அந்த கார், சாலையோரம் இருந்த செல்வம் என்பவரது வீட்டின் சுற்றுச்சுவரை இடித்துவிட்டு, வீட்டுக்குள் புகுந்து நின்றது.
செல்வம் மற்றும் அவரது குடும்பத்தினர் பக்கத்து ஊரில் நடந்த கோவில் திருவிழாவிற்கு சென்றுவிட்டனர். இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. மேலும் காரை ஓட்டி வந்த முத்துக்குமார் லேசான காயத்துடன் உயிர் தப்பினார். இதுகுறித்து தகவல் அறிந்த நத்தம் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர்.
மேலும் காயமடைந்த முத்துக்குமாரை மீட்டு சிகிச்சைக்காக நத்தம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சுற்றுச்சுவரை இடித்துக்கொண்டு வீட்டுக்குள் கார் புகுந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
Related Tags :
Next Story