மினி வேன் கண்ணாடியை உடைத்து வியாபாரிக்கு மிரட்டல்
கொடைக்கானல் அருகே மினி வேன் கண்ணாடியை உடைத்து, வியாபாரிக்கு மிரட்டல் விடுத்த 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
கொடைக்கானல்:
கர்நாடக மாநிலம் சிக்கமகளூரு மாவட்டம் கலத்திபுரா பகுதியை சேர்ந்தவர் கோவிந்தராஜ். வியாபாரியான இவர், சொந்தமாக மினி வேன் வைத்துள்ளார். இந்த வேனில் அவர் கொடைக்கானல் மேல்மலை பகுதிக்கு வந்து, அங்கு விளையும் காய்கறிகளை கொள்முதல் செய்து கர்நாடக மாநிலத்திற்கு கொண்டு சென்று விற்பனை செய்வது வழக்கம்.
அதன்படி, நேற்று முன்தினம் அவர் காய்கறி வாங்குவதற்காக பூண்டி கிராமத்திற்கு வந்தார். அப்போது அவரது வேனை 2 வாலிபர்கள் வழிமறித்து, கோவிந்தராஜூவிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும் கடந்த முறை வேனில் வந்தபோது தங்களது மோட்டார் சைக்கிள் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றுவிட்டதாக அந்த வாலிபர்கள் குற்றம்சாட்டினர். இதனால் அவர்களிடம் கோவிந்தராஜ் சமாதானம் பேசினார். அதற்குள் அந்த வாலிபர்கள் வேனின் கண்ணாடியை உடைத்ததுடன், கோவிந்தராஜூவுக்கு கொலை மிரட்டல் விடுத்துவிட்டு தப்பிச்சென்றனர்.
இதுகுறித்து கோவிந்தராஜ் கொடைக்கானல் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் செல்வராஜ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்.
அதில், மினி வேனின் கண்ணாடியை உடைத்து கொலை மிரட்டல் விடுத்த நபர்கள் தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள குருவிகுளத்தை சேர்ந்த அய்யாதுரை (34), கொடைக்கானல் பாம்பார்புரத்தை சேர்ந்த முகமது ஆரிப் (28) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
Related Tags :
Next Story