வாரத்தில் 3 நாட்கள் மட்டுமே பள்ளிக்கு செல்லும் மாணவர்கள்
பெரியமாம்பட்டு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் சுழற்சி முறையில் வகுப்புகள் நடைபெறுவதால் வாரத்தில் 3 நாட்கள் மட்டுமே மாணவர்கள் பள்ளிக்கு செல்கின்றனர்.
கண்டாச்சிமங்கலம்,
கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி எதிரே பெரியமாம்பட்டு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி (பெண்) அமைந்துள்ளது. 1919-ம் ஆண்டு இந்த பள்ளிக்கூடம் கட்டப்பட்டது. 100 ஆண்டுகள் பழமைவாய்ந்த இப்பள்ளியில் 340 மாணவ-மாணவிகள் படித்து வருகிறார்கள். ஆனால் இந்த மாணவர்களுக்கு முழுமையாக கல்வி கற்பதில்லை என்ற குற்றச்சாட்டு எழுகிறது. ஆம் பள்ளிக்கூடத்தில் போதிய கட்டிடங்கள், வகுப்பறை வசதி இல்லாததால் மாணவ-மாணவிகளுக்கு சுழற்சி முறையில் கல்வி கற்றுக்கொடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. அது பற்றி பார்ப்போம்.
பூட்டிக்கிடக்கும் வகுப்பறைகள்
ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பபள்ளியில் 5 கட்டிடங்கள் உள்ளன. இதில் சேதமடைந்த ஒரு கட்டிடம் மட்டும் முழுமையாக இடித்து தரைமட்டமாக்கப்பட்டது. மேலும் 2 கட்டிடங்கள் இப்ப விழுமோ... எப்ப விழுமோ என்ற நிலையில் இருக்கிறது. இதனால் மாணவர்களின் நலன் கருத்தி அந்த கட்டிடங்களில் வகுப்பறை செயல்படவில்லை. அந்த கட்டிடங்கள் பூட்டிக்கிடக்கிறது. மீதமுள்ள 2 கட்டிடங்களில் 4 வகுப்பறைகள் மட்டுமே உள்ளன. இதில் ஒரே நேரத்தில 340 மாணவ-மாணவிகளை அமர வைக்க முடியாது. அவர்களுக்கு கல்வி போதிக்கவும் முடியாது. எனவே இந்த பள்ளிக்கூடத்தில் சுழற்சி முறையில் வகுப்புகள் நடத்த ஆசிரியர்கள் முடிவு செய்தனர்.
சுழற்சி முறையில்...
அதன்படி கடந்த 6 மாதங்களாக ஒருநாள் மாணவர்களும், ஒரு நாள் மாணவிகளும் என சுழற்சி முறையில் வகுப்புகள் நடைபெறுகிறது. அதாவது வாரத்தில் 3 நாட்கள் மாணவர்களுக்கும், 3 நாட்கள் மாணவிகளுக்கும் கல்வி போதிக்கப்படுகிறது. வாரத்தில் 3 நாட்கள் மட்டுமே மாணவர்கள் பள்ளிக்கு செல்கின்றனர். அதுவும் வாரத்தில் சனிக்கிழமை விடுமுறை விட்டால் மாணவிகளுக்கோ அல்லது மாணவர்களுக்கு வாரத்தில் 2 நாள் மட்டும்தான் பள்ளிக்கு செல்ல வேண்டி இருக்கும். இதில் ஒரு அறையில் 2 வகுப்புகள் மற்றும் தலைமை ஆசிரியர் அறை உள்ளது. ஒரே நேரத்தில் 2 வகுப்புகளில் பாடங்கள் நடத்துவதால், மாணவர்கள் பாடங்களை கவனிக்க முடியாத நிலை உள்ளது. இதன் காரணமாக மாணவர்களின் கற்றல் திறன் பாதிக்கப்படுவதால் பெற்றோர்கள் கவலையில் உள்ளனர்.
தினசரி வகுப்புகள் நடத்த வேண்டும்
ஏற்கனவே கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா தொற்று பரவல் காரணமாக ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடந்தது. அதிலும் மாணவர்கள் சரியான முறையில் பாடங்களை கற்க முடியவில்லை. தற்போது நேரடி வகுப்புகள் தொடங்கப்பட்டும், தினசரி வகுப்புகள் நடைபெறாததால் மாணவர்களின் கல்வி கேள்விக்குறியாகும் நிலை உள்ளது. எனவே மாணவர்களின் நலன் கருதி சுழற்சி முறையில் வகுப்புகள் நடத்தாமல் தினசரி வகுப்புகள் நடத்த வேண்டும். மேலும் பள்ளிக்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நேரில் சென்று ஆய்வு செய்து பயன்படுத்தப்படாத பழைய கட்டிடங்களை உடனடியாக இடித்துவிட்டு புதிய கட்டிடம் கட்டித்தர வேண்டும் என மாணவர்களும், அவர்களது பெற்றோரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Related Tags :
Next Story