கள்ளக்குறிச்சியை சேர்ந்த 2 பேர் பலி
காரும், லாரியும் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் மேலும் கள்ளக்குறிச்சியை சேர்ந்த 2 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இதனால் பலி எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது.
சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் பெரம்பலூர் மாவட்டம், சிறுவாச்சூரில் இருந்து மலையப்ப நகர் பிரிவு ரோடு அருகே கடந்த 3-ந் தேதி திருச்சியில் இருந்து பெரம்பலூர் நோக்கி வந்த காரும், பெரம்பலூரில் இருந்து திருச்சி நோக்கி சென்ற லாரியும் நேருக்கு நேர் பயங்கரமாக மோதி விபத்துக்குள்ளானது.
இதில் காரில் பயணம் செய்த 9 பேரில், கள்ளக்குறிச்சி தீர்த்தாலு நகர் பகுதியை சேர்ந்த கார்முகில் (வயது 40), அவரது மகன் லிங்கநேத்திரன்(8), நண்பரான கள்ளக்குறிச்சி மாவட்டம், முடியனூரை சேர்ந்த கண்ணன்(45) ஆகிய 3 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். கார்முகிலின் தாய் தமிழரசி(65), அண்ணன் கதிரவன்(45), கதிரவனின் மகன் சந்திரவதனன் (13), நண்பர் கண்ணனின் மனைவி வேதவள்ளி(40), கண்ணனின் மகன் கிஷோர்(11) ஆகிய 5 பேர் படுகாயமடைந்தனர். இந்த விபத்தில் கண்ணனின் 2-வது மகன் திவாகர் (6) மட்டும் எவ்வித காயமும் இன்றி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினான்.
மேலும் 2 பேர் சாவு
படுகாயமடைந்தவர்கள் பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்தபோது தமிழரசி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது தொடர்பாக பெரம்பலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த கிஷோர் நேற்று முன்தினம் மாலையிலும், சந்திரவதனன் நேற்று அதிகாலையிலும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.
இதனால் விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 6-ஆக உயர்ந்துள்ளன. உயிரிழந்த சந்திரவதனன் 7-ம் வகுப்பும், கிஷோர் 5-ம் வகுப்பும் படித்து வந்தனர். தற்போது கதிரவன் திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையிலும், வேதவள்ளி பெரம்பலூர் அரசு மருத்துவமனையிலும் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.
Related Tags :
Next Story