

அன்னவாசல்,
இலுப்பூர் பேரூராட்யில் சொத்துவரி சீராய்வு சிறப்பு கூட்டம் நேற்று நடந்தது. இலுப்பூர் பேரூராட்சியில் நடந்த கூட்டத்திற்கு பேரூராட்சி தலைவர் சகுந்தலா தலைமை தாங்கினார். செயல் அலுவலர் ஆசாராணி முன்னிலை வகித்தார். கூட்டத்தில் சொத்துவரி சீராய்வு குறித்து பேசப்பட்டபோது அ.தி.மு.க. கவுன்சிலர்கள் குறிக்கிட்டு கடந்த 10 ஆண்டு கால அ.தி.மு.க. ஆட்சியில் சொத்து வரியை உயர்த்தவில்லை எனவும், தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றாமல் தமிழக அரசு சொத்து வரியை உயர்த்தி ஏழை, எளிய மக்களின் வயிற்றில் அடிப்பதாக குற்றம் சாட்டி வெளிநடப்பு செய்தனர். பின்னர் தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.
இதேபோன்று அன்னவாசல் பேரூராட்சி அலுவலகத்தில் நடந்த சொத்துவரி சீராய்வு சிறப்பு கூட்டத்திற்கு பேரூராட்சி தலைவர் சாலைபொன்னம்மா தலைமை தாங்கினார். செயல் அலுவலர் மாதேஸ்வரன் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் 150 சதவீத சொத்து வரி உயர்வுக்கு ஆதரவு தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அன்னவாசல் பேரூராட்சியில் அ.தி.மு.க. கவுன்சிலர்கள் தனி பெரும்பான்மையுடன் இருப்பது குறிப்பிடத்தக்கது.