உண்ணாவிரத போராட்டம்
கைத்தறி நெசவாளர் சங்கத்தினர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பரமக்குடி,
பரமக்குடியில் அனைத்து கைத்தறி நெசவாளர் தொழிற் சங்கங்கள் மற்றும் கைத்தறி பட்டு ஜவுளி சிறு உற்பத்தி யாளர்கள் இணைந்து தரைப்பாலம் அருகில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினர். இதற்கு கைத்தறி பட்டு ஜவுளி சிறு உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பின் தலைவர் சேசவராமன் தலைமை தாங்கினார். போராட்ட குழு கன்வீனர்கள் கோவிந்தன், குப்புசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். பரமக்குடி சவுராஷ்டிரா சபை தலைவர் மாதவன், எமனேசுவரம் சவுராஷ்ட்ரா சபைத் தலைவர் சேசய்யன் ஆகியோர் உண்ணா விரதப் போராட்டத்தை தொடங்கி வைத்தனர். இதில் அசல் பட்டு மற்றும் ஜரிகை விலை உயர்வை கட்டுப் படுத்த கோரியும், ஜி.எஸ்.டி வரியை முழுவதும் நீக்க கோரியும், அசல் பட்டு இறக்குமதியை உடனடியாக செய்ய கோரியும், அசல் பட்டுநூல் கார்ப்பரேட் மயமாக்குவதை தடுக்கக் கோரியும், பருத்தி நூல் விலை உயர்வை கட்டுப் படுத்த கோரியும், 60 வயதான அனைத்து நெசவாளர் களுக்கும் மாதம் ரூ.3 ஆயிரம் ஓய்வூதியம் வழங்க கோரியும் அரசுகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். பட்டு ஜவுளி சிறு உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பு நிர்வாகிகள் குப்புசாமி, சவுந்தர்ராஜன், நாகராஜன், சுப்பிரமணியன், சீனிவாசன், சுப்பிரமணியன் உள்பட தொழிற்சங்க நிர்வாகிகள் உண்ணாவிரதப் போராட்டத்தை வாழ்த்திப் பேசினர். ஏ.ஐ.டி.யூ.சி. கைத்தறி பிரிவு மாவட்ட செயலாளர் பெருமாள் உண்ணாவிரதத்தை முடித்து வைத்தார். பரமக்குடி எமனேசுவரம் பகுதியில் உள்ள அனைத்து நெசவாளர்களும் வேலை நிறுத்தம் செய்து கைத்தறி பட்டு ஜவுளி கடைகள் அடைக்கப்பட்டன.
Related Tags :
Next Story