சாலைகளை சுத்தம் செய்த வட்டார வளர்ச்சித்துறை அலுவலர்கள்
மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த சாலைகளை கூட்டி சுத்தம் செய்த வட்டார வளர்ச்சித்துறை அலுவலர்களுக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.
தா.பழூர்
குப்பைகளை அகற்றும் பணி
அரியலூர் மாவட்டம், தா.பழூர் ஊராட்சி ஒன்றியம் முழுவதும் தூய்மை பணிகளை ஊக்குவிக்கும் விதமாக ஒன்றிய அலுவலகம் முதல் சுத்தமல்லி பிரிவு சாலை வரை சாலையோரங்களில் இருந்த குப்பைகளை அகற்றும் பணி மேற்கொள்ளப்பட்டது.
தா.பழூர் வட்டார வளர்ச்சி அலுவலர் (வட்டார ஊராட்சிகள்) ஜெயராஜ் மேற்பார்வையில், தா.பழூர் முதல்நிலை ஊராட்சி தூய்மைப் பணியாளர்கள் வீதிகளை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டனர். அப்போது வட்டார வளர்ச்சி அலுவலர் ஜெயராஜ் துப்புரவு பணியாளர்கள் தெருக்களை துடைப்பத்தை எடுத்து சாலையோரத்தில் இருந்த குப்பைகளை தானே அகற்ற துவங்கினார்.
அலுவலர்கள்
இதனைப்பார்த்த வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சிகள்) அன்புசெல்வன், துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் இளங்கோவன், சத்யராஜ், சரவணன், செந்தில்குமார், வட்டார சுகாதார ஒருங்கிணைப்பாளர் கருணாநிதி ஆகியோர் ஒன்றிய அலுவலக சுற்றுச்சுவர், மகளிர் சுய உதவிக்குழு கட்டிட சுவர், அரசு மேல்நிலைப்பள்ளி சுற்றுச்சுவர் ஆகிய இடங்களில் ஒட்டப்பட்டிருந்த விளம்பர பதாகைகளை அப்புறப்படுத்தியதோடு, சாலைகளை கூட்டி தூய்மை செய்யும் பணியில் அவர்களும் ஈடுபட்டனர். ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பணிபுரியும் அலுவலர்கள் வீதிகளில் இறங்கி தூய்மைப் பணியில் ஈடுபட்டதை பார்த்த பொதுமக்கள் இதனை வெகுவாகப் பாராட்டினார்.
இதுகுறித்து வட்டார வளர்ச்சி அலுவலர் ஜெயராஜ் கூறுகையில், மாவட்ட கலெக்டர் ரமண சரஸ்வதி மற்ற இடங்களுக்கு முன்மாதிரியாக ஒன்றிய அலுவலக வளாகத்திற்கு அருகில் உள்ள பகுதிகளில் தூய்மையாக பராமரிப்பதற்கான முன்னெடுப்புகளை மேற்கொள்ள உத்தரவிட்டார்.
விழிப்புணர்வு
பணியாளர்களை கொண்டு தூய்மைப்படுத்தினாலும் சாலையோரங்களில் இருக்கும் மக்கள் தொடர்ந்து குப்பைகளை தெருக்களில் வீசி கொண்டே இருப்பதை நம்மால் பார்க்க முடிகிறது. எனவே மட்கும், மக்காத குப்பைகளை பொதுமக்களும், கடைக்காரர்களும், வணிகர்களும் தனித்தனி பெட்டிகளில் வைத்திருந்து குப்பை வண்டி வரும்போது அதில் சேர்க்க வேண்டும் என்பதை வலியுறுத்தும் விதமாகவே ஒன்றிய அலுவலகத்தில் பணிபுரியும் நாங்கள் ஒன்றாக சேர்ந்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் தூய்மைப் பணியில் ஈடுபட்டோம் என்றார்.
தொடர்ந்து இன்றும் (சனிக்கிழமை) தூய்மை பணியில் ஈடுபட இருப்பதாகவும், இதை தொடர்ந்து வாரத்திற்கு ஒருநாள் ஒன்றிய அலுவலகத்தில் பணிபுரியும் அலுவலர்கள் தா.பழூர் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் முன்மாதிரியாக தூய்மை பணிகளை செய்வோம் என்று கூறினார்.
Related Tags :
Next Story