பருத்தி சாகுபடிக்கான பொருட்கள் மானிய விலையில் வழங்கப்படுகிறது
பருத்தி சாகுபடிக்கான பொருட்கள் மானிய விலையில் வழங்கப்படுகிறது.
தா.பழூர்
அரியலூர் மாவட்டம், தா.பழூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நெல் வயல்களில் பருத்தி சாகுபடியை ஊக்குவிக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக பருத்தி விவசாயிகளுக்கு நீடித்த நிலையான பருத்தி இயக்க திட்டத்தின் கீழ் நுண் சத்துகள், மெக்னீசியம் சல்பேட் போன்ற பருத்தி சாகுபடிக்கு தேவையான பொருட்கள் மானிய விலையில் வழங்கப்படுகிறது. கடந்த ஆண்டு இதே பருவத்தில் குறுவை நெல் சாகுபடிக்கு பதிலாக நெல் வயல்களில் 60 எக்டேர் நிலப்பரப்பில் பருத்தி சாகுபடி செய்யப்பட்டது. தமிழகம் முழுவதும் அதிகப்படியான நெல் உற்பத்தி செய்யப்பட்டு வருவதால் அதனை சேமிப்பதிலும் மதிப்பு கூட்டப்பட்ட பொருளாக மாற்றுவதிலும் அரசு பல்வேறு சவால்களை சந்தித்து வருகிறது. அதுமட்டுமில்லாமல் நெல்வயல்களில் சுழற்சி முறையில் மாற்றுப்பயிர்கள் செய்யும்போது மண்ணின் வளம் காக்கப்படும். மேலும் அளவுக்கு அதிகமான ரசாயன உரங்கள் தேவைப்படாது என்பதால் குறுவை நெல் நடவுக்கு பதிலாக பருத்தி விவசாயத்தில் ஈடுபட விவசாயிகளுக்கு ஆலோசனை வழங்கப்பட்டன. எனவே இந்த ஆண்டு 100 முதல் 150 எக்டேர் பரப்பளவில் பருத்தி சாகுபடி செய்யப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக வேளாண்மைத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இதனை அரியலூர் மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் பழனிசாமி பருத்தி சாகுபடி செய்யப்பட்ட வயல்களை ஆய்வுசெய்து விவசாயிகளை ஊக்கப்படுத்தினார். விவசாயிகளுக்கு நுண்ணூட்ட சத்துகள், மெக்னீசியம் சல்பேட் உள்ளிட்டவற்றை மானிய விலையில் வழங்கி தொடங்கி வைத்தார். வேளாண்மைத்துறை அதிகாரிகள் சோழமாதேவி, இடங்கண்ணி, வாழை குறிச்சி உள்ளிட்ட கிராமங்களில் நெல் சாகுபடிக்கு பதிலாக பருத்தி, உளுந்து, பயிறு வகைகளை சாகுபடி செய்துள்ள விவசாய நிலங்களை ஆய்வு செய்து விவசாயிகளை பாராட்டினர். அப்போது தா.பழூர் வட்டார வேளாண்மை இயக்குனர் அசோகன், வேளாண்மை அலுவலர் செல்வகுமார், உதவி வேளாண்மை அலுவலர்கள் உடன் இருந்தனர்.
Related Tags :
Next Story