விலைவாசி உயர்வு: சத்துணவு திட்டத்துக்கு கூடுதல் நிதி ஒதுக்கப்படுமா?


விலைவாசி உயர்வு: சத்துணவு திட்டத்துக்கு கூடுதல் நிதி ஒதுக்கப்படுமா?
x
தினத்தந்தி 9 April 2022 2:06 AM IST (Updated: 9 April 2022 2:06 AM IST)
t-max-icont-min-icon

விலைவாசி உயர்ந்து வரும் நிலையில் அரசு பள்ளிக்கூடங்களில் செயல்படுத்தப்படும் சத்துணவு திட்டத்துக்காக கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்ற கோரிக்கை எழுந்து உள்ளது.

விலைவாசி உயர்ந்து வரும் நிலையில் அரசு பள்ளிக்கூடங்களில் செயல்படுத்தப்படும் சத்துணவு திட்டத்துக்காக கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்ற கோரிக்கை எழுந்து உள்ளது.
மதிய உணவு
தமிழ்நாடு அரசு சார்பில் தமிழ்நாட்டில் உள்ள அரசு மற்றும் அரசு நிதி உதவி பெறும் பள்ளிக்கூடங்களில் படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு சத்துணவு திட்டத்தில் மதிய உணவு வழங்கப்பட்டு வருகிறது.
தினமும் மதியம் மாணவ-மாணவிகளுக்கு சத்தான உணவு வழங்கும் வகையில் பருப்பு சாம்பார், காய்கறிகள், கலவை சாதம் என தினசரி ஒவ்வொரு விதமான உணவு வழங்கப்படுகிறது. இந்த திட்டத்துக்கான அரிசி, முட்டை, பருப்பு உள்ளிட்ட பொருட்கள் அரசு சார்பில் வழங்கப்படுகிறது.
ரூ.2 நிதி
தினசரி சமையலுக்கான மளிகை பொருட்கள், கலவை சாதத்துக்கு தேவையான எலுமிச்சை பழம் உள்ளிட்ட பொருட்கள் மற்றும் சமையலுக்கு தேவையான கியாஸ் சிலிண்டர் ஆகியவற்றை அந்தந்த பள்ளிக்கூடத்தின் சத்துணவு அமைப்பாளர்கள் வாங்கிக்கொள்ள அனுமதிக்கப்பட்டு உள்ளது.
இதற்காக ஒரு மாணவருக்கு சராசரியாக நாள் ஒன்றுக்கு ரூ.2 அளிக்கப்படுகிறது. 100 பேர் சத்துணவு சாப்பிடும் ஒரு பள்ளிக்கூடத்துக்கு எரிபொருள், மளிகைப்பொருள் மற்றும் இதர பொருட்களுக்காக தினசரி சுமார் ரூ.200 மட்டும் ஒதுக்கப்படுகிறது. இது பருப்பு சாதமாக இருந்தால் ரூ.2-க்கும் குறைவாகவே ஒதுக்கப்படுகிறது. இந்த தொகையில் காய்கறிகள், மளிகை பொருட்களை சத்துணவு அமைப்பாளர்கள் வாங்க வேண்டியது உள்ளது.
சிரமம்
இந்தநிலையில் தற்போது அனைத்து பொருட்களும் விலை உயர்ந்து விட்டன. இதனால் அரசு ஒதுக்கீடு செய்து உள்ள நிதியில் மாணவ-மாணவிகளின் சமையலுக்கு தேவையான பொருட்களை வாங்க முடியாமல் சிரமப்பட்டு வருவதாக சத்துணவு அமைப்பாளர் ஒருவர் தெரிவித்தார்.
இதுபற்றி அவர் கூறியதாவது:-
தமிழக அரசின் சத்துணவு திட்டத்தில் அனைத்து அரசு மற்றும் அரசு நிதி உதவி பள்ளிக்கூடங்களில் மதிய உணவு வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தின் கீழ் சாப்பிடும் மாணவ-மாணவிகளுக்கு தரமான உணவு வழங்க வேண்டும் என்று அரசு தொடர்ந்து பல்வேறு உத்தரவுகளை வழங்கி வருகிறது. முன்பு சாதம் மற்றும் சாம்பார் வழங்கப்படும். சமையலுக்கு விறகு வாங்கப்பட்டது. ஆனால் கடந்த சில ஆண்டுகளாக தினசரி விதவிதமாக கலவை சாதம் வழங்க உத்தரவிடப்பட்டு உள்ளது. அதுமட்டுமின்றி சமையலுக்கு கண்டிப்பாக விறகு பயன்படுத்தக்கூடாது என்றும் கியாஸ் மட்டும்தான் பயன்படுத்த வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டு உள்ளது.
விலைவாசி உயர்வு
தற்போதைய சூழலில் விலைவாசி உயர்வால் மானிய விலை கியாஸ் சிலிண்டர் ஒன்று ரூ.1,000-த்தை தாண்டி விட்டது. சமையல் செய்யவும், முட்டை வேக வைக்கவும் பயன்படுத்தும்போது ஒரு சிலிண்டர் 15 நாட்கள் கூட வருவதில்லை. அதிகமான மாணவர்கள் இருந்தால் இன்னும் குறைந்த நாட்கள்தான் சிலிண்டர் வரும். இந்த நிலையில் சராசரியாக ஒரு மாணவருக்கு ரூ.2 நிதி என்பது மிகவும் குறைவானதாக உள்ளது.
100 மாணவ-மாணவிகளுக்கு எலுமிச்சை சாதம் சமைக்க வேண்டும் என்றால் குறைந்த பட்சம் 50 பழங்கள் வேண்டும். தற்போது வெயில் காலம் என்பதால் சந்தையிலேயே ஒரு பழம் ரூ.10-க்கு விற்பனையாகிறது. 50 பழங்கள் வாங்க ஒரு நாளைக்கு ரூ.500 செலவாகிறது. ஆனால் அரசின் மொத்த ஒதுக்கீடு வெறும் ரூ.200 மட்டுமே உள்ளது.
கூடுதல் நிதி கோரிக்கை
சத்துணவு திட்டத்தில் சாப்பிடும் குழந்தைகளுக்கான தினசரி நிதி ஒதுக்கீட்டினை அதிகப்படுத்த வேண்டும். கூடுதல் நிதி வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.

Next Story