பெட்ரோல்-டீசல், சமையல் கியாஸ் விலை உயர்வை கண்டித்து பெங்களூருவில் ஜனதாதளம் (எஸ்) கட்சி ஆர்ப்பாட்டம்


கியாஸ் சிலிண்டரை கையில் ஏந்தியபடி ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற குமாரசாமி.
x
கியாஸ் சிலிண்டரை கையில் ஏந்தியபடி ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற குமாரசாமி.
தினத்தந்தி 9 April 2022 2:15 AM IST (Updated: 9 April 2022 2:15 AM IST)
t-max-icont-min-icon

பெட்ரோல்-டீசல், சமையல் கியாஸ் விலை உயர்வை கண்டித்து பெங்களூருவில் ஜனதாதளம் (எஸ்) கட்சி ஆர்ப்பாட்டம் நடத்தியது. இதில் பங்கேற்ற குமாரசாமி, சாமானிய மக்கள் எப்படி வாழ முடியும் என்று கேள்வி எழுப்பினார்.

பெங்களூரு:

ஆர்ப்பாட்டம்

  ஜனதா தளம் (எஸ்) சார்பில் பெட்ரோல்-டீசல், சமையல் கியாஸ் விலை உயர்வை கண்டித்து ஜனதா ஆர்ப்பாட்டம் பெங்களூரு சுதந்திர பூங்காவில் நேற்று நடைபெற்றது. இதில் அக்கட்சியை சேர்ந்த முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி கலந்து கொண்டு ஆர்ப்பாட்டத்திற்கு தலைமை ஏற்று நடத்தினார். இதில் பெட்ரோல்-டீசல் விலை உயர்வை கண்டித்து அவர்கள் கோஷங்களை எழுப்பினர். சமையல் கியாஸ் மாதிரி படங்களை அவர்கள் கைகளில் ஏந்தி இருந்தனர். இதில் குமாரசாமி பேசியதாவது:-

  கர்நாடகத்தில் பா.ஜனதா தவறான வழியில் செயல்பட்டு எனது தலைமையிலான கூட்டணி அரசை கவிழ்த்தது. அதே போல் தவறான வழியில் பா.ஜனதா அரசு அமைந்தது. இன்று காங்கிரஸ் கட்சியினர் பா.ஜனதா அரசை முறைகேடு அரசு என்று அழைக்கிறார்கள். இதை மாநில மக்கள் கவனிக்க வேண்டும். பெட்ரோல்-டீசல், சமையல் எரிவாயு சிலிண்டர் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது.

அனுமதி அளிக்கவில்லை

  இதனால் தினசரி பயன்படுத்தும் அத்தியாவசிய பொருட்களின் விலையும் உயர்ந்துவிட்டது. இதனால் சாமானிய மற்றும் நடுத்தர மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுபற்றி எதுவும் பேசாமல் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை மவுனம் காக்கிறார். மதங்கள் இடையே மோதல் ஏற்படுவதை முதல்-மந்திரி ஊக்குவிக்கிறார். விலைவாசி உயர்வை கண்டித்து ஊர்வலம் நடத்த முடிவு செய்திருந்தோம்.

  ஆனால் அதற்கு இந்த அரசு அனுமதி அளிக்கவில்லை. ஆனால் பா.ஜனதா தனக்கு வேண்டிய அமைப்புகள் ஊர்வலம் நடத்த அனுமதி அளிக்கிறது. அத்தியாவசிய பொருட்களின் விலை விண்ணை தொட்டுவிட்டது. இன்று சமையல் கியாஸ் சிலிண்டரின் விலை ரூ.1,000-ஐ தொட்டுவிட்டது. விலைவாசி உயர்வால் ஏழை குடும்பங்கள் சொந்த வீடு கட்ட முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

மத பிரச்சினைகள்

  இரும்பு கம்பியின் விலை ஒரு டன் விலை ரூ.1 லட்சம் அதிகரித்துள்ளது. சிமெண்டு விலையில் ரூ.500 வரை அதிகரித்துள்ளது. விலைவாசி இப்படி உயர்ந்து சென்றால் சாமானிய மக்கள் எப்படி வாழ முடியும். மாநில அரசு தற்போது மின் கட்டணத்தை அதிகரித்துள்ளது. அதைத்தொடர்ந்து தற்போது பால் விலையை உயர்த்தவும் அரசு திட்டமிட்டுள்ளது. இந்த விலைவாசி உயர்வால் மக்கள் மத்தியில் பா.ஜனதா மீது மிகப்பெரிய அதிருப்தி ஏற்பட்டுள்ளது.

  அதனால் அந்த மக்களின் கவனத்தை திசை திருப்பும் நோக்கத்தில், பா.ஜனதா மத பிரச்சினைகளை ஏற்படுத்துகிறது.
  இவ்வாறு குமாரசாமி பேசினார்.

  இந்த ஆர்ப்பாட்டத்தில் அக்கட்சியின் மாநில தலைவவர் எச்.கே.குமாரசாமி, மஞ்சுநாத் எம்.எல்.ஏ., முன்னாள் எம்.எல்.சி. டி.ஏ.ஷரவணா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story