போக்சோ வழக்கில் கைதான மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை
கதக் சிறையில் அடைக்கப்பட்டு இருந்த போக்சோ வழக்கில் கைதான மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.
கதக்:
வாலிபர் தூக்கிட்டு தற்கொலை
கதக் மாவட்டம் அடவிசோமபுரா கிராமத்தை சேர்ந்தவர் ராஜு லமானி (வயது 19). இவர் மைனர் பெண் ஒருவர் கொடுத்த புகாரின் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் போலீசாரால் கைது செய்யப்பட்டார். பின்னர் விசாரணை கைதியாக அவர் கதக் கிளை சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார். 20 நாட்களாக அவர் சிறையில் இருந்து வந்தார்.
இந்த நிலையில் நேற்று அதிகாலை 1 மணி அளவில் ராஜு லமானி சிறையில் உள்ள கழிவறையில் துண்டால் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். இதுபற்றி நேற்று காலை தான் சக கைதிகளுக்கும், சிறை அதிகாரிகளுக்கும் தெரியவந்தது.
போலீஸ் விசாரணை
இதையடுத்து கதக் போலீசார் விரைந்து வந்து, ராஜு லமானி உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். மேலும் சம்பவ இடத்திற்கு மாவட்ட தலைமை நீதிபதி வந்து விசாரணை நடத்தி வருகிறார்.
போலீஸ் விசாரணையில், ராஜு லமானி கதக் டவுனில் உள்ள ஜே.டி. கல்லூரியில் பி.யூ.சி. 2-ம் ஆண்டு படித்து வந்தார். இவர் அதே கல்லூரியில் பி.யூ.சி. முதலாம் ஆண்டு படித்து வந்த மாணவி ஒருவரை காதலித்து வந்ததாக தெரிகிறது.
போக்சோ வழக்கில் கைதான மாணவர்
ஆனால் திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி மாணவியுடன் உல்லாசம் அனுபவித்துவிட்டு அவர் ஏமாற்றிவிட்டதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக மாணவி கொடுத்த புகாரின் பேரில் அனைத்து மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து ராஜு லமானியை கைது செய்து சிறையில் அடைத்திருந்தனர்.
20 நாட்களாக சிறையில் இருந்து வந்த ராஜு லமானியின் ஜாமீன் மனு நேற்று முன்தினம் கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. அவருக்கு கோர்ட்டு நேற்று ஜாமீன் வழங்க இருந்ததாகவும் தெரிகிறது. இந்த நிலையில் மனவேதனையில் இருந்த ராஜு லமானி, நேற்று அதிகாலை சிறை கழிவறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது விசாரணையில் தெரியவந்துள்ளது.
பரபரப்பு
இதுதொடர்பாக கதக் போலீசார் வழக்குப்பதிவு செய்து மேல் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.
இதற்கிடையே ராஜு லமானியின் தற்கொலைக்கு சிறை அதிகாரிகள் தான் காரணம் என அவரது பெற்றோர் குற்றச்சாட்டு கூறியுள்ளனர்.
இந்த சம்பவம் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
Related Tags :
Next Story