வாடகை இ-பைக் வசதி கிடைக்குமா?
திருச்சி ரெயில் நிலையத்தில் இருப்பதுபோன்று தஞ்சை ரெயில் நிலையத்திலும் வாடகை இ-பைக் வசதி கிடைக்குமா? என சுற்றுலா பயணிகள், தஞ்சை மாநகர பொதுமக்கள் எதிர்பார்த்து உள்ளனர்.
தஞ்சாவூர்;
திருச்சி ரெயில் நிலையத்தில் இருப்பதுபோன்று தஞ்சை ரெயில் நிலையத்திலும் வாடகை இ-பைக் வசதி கிடைக்குமா? என சுற்றுலா பயணிகள், தஞ்சை மாநகர பொதுமக்கள் எதிர்பார்த்து உள்ளனர்.
வாடகை இ-பைக் வசதி
நாளுக்கு நாள் அதிகரித்து வரும் பெட்ரோல், டீசல் விலையின் காரணமாக பொது மக்கள் வெகுவாக பாதித்துள்ள நிலையில் தங்களின் பொருளாதார சிக்கல்களை சமாளிக்க பல்வேறு முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில் தங்களின் வாகன போக்குவரத்துக்கு மாற்றம் தேடியும் வந்தனர்.
இந்த நிலையில் திருச்சி ரெயில் நிலையத்தில் செயல்பட்டு வரும் வாடகை இ-பைக் வசதி சுற்றுலா பயணிகள், திருச்சி மாநகர மக்கள், மாணவர்கள், விற்பனை பிரதிநிதிகள் மற்றும் பயணிகளிடையே மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.
நேரம், நாள் மற்றும் வார வாடகைகளுக்கு கிடைக்கும் இந்த இ-பைக் வாடகை சேவை, தற்போது தெற்கு ரெயில்வே மண்டலத்தில் திருச்சி ரெயில் நிலையத்தில் மட்டும் இயக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுற்றுலா தலம்
ஆன்மிகம் மற்றும் சுற்றுலா தலமான தஞ்சை மாநகரத்தின் தொன்மை மற்றும் பாரம்பரியம் நாம் அனைவரும் அறிந்த ஒன்றே. இந்த தொன்மையினை பறைசாற்றும் விதமாக பல்வேறு ஆன்மிக மற்றும் சுற்றுலா தலங்கள், தஞ்சை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் அமைந்துள்ளது.
சோழர் காலத்தை பிரதிபலித்து ஆயிரம் ஆண்டு கடந்து நிற்கும் தஞ்சை பெரியகோவில், புன்னைநல்லூர் மாரியம்மன் கோவில், திட்டை குருபகவான் கோவில், திங்களூர் சந்திரன் கோவில் திருவையாறு அய்யாரப்பர் கோவில் போன்ற கோவில்களும், மராட்டிய மன்னரின் அரண்மனை, அரிய ஓலைச்சுவடிகள் பல சுமந்து நிற்கும் சரஸ்வதி மஹால் நூலகம், தஞ்சை கலைக்கூடம், பலங்கால நாணயங்களின் அருங்காட்சியகம் மற்றும் கைவினை பொருட்களின் தயாரிப்பு கூடங்கள் என சுற்றுலா தலங்களும் தஞ்சை மாநகரில் நிறைந்து உள்ளது.
குவியும் பயணிகள்
இந்த கோவில்களில் வேண்டுதல்களை நிறைவேற்றவும் அவற்றின் அழகு மற்றும் சுற்றுலா தலங்களை பார்த்து ரசிக்கவும் பொது மக்கள், பக்தர்கள், ஆராய்ச்சியாளர்கள், ஓவியர்கள், மாணவர்கள், சுற்றுலா பயணிகள் என உள்ளூர் மக்கள், பிற மாவட்டங்கள், மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து நாள்தோறும் ஆயிரக்கணக்கானோர் தஞ்சையை நோக்கி வந்த வண்ணம் உள்ளனர்.
பிற மாவட்ட, மாநில மற்றும் வெளிநாடுகளில் இருந்து தஞ்சைக்கு வருகிற பயணிகள் ரெயில் போக்குவரத்தையே அதிகமாக பயன்படுத்துகின்றனர்.
தஞ்சை ரெயில் நிலையத்திலும்
இவர்கள் தஞ்சை ரெயில் நிலையத்தில் இருந்து இந்த கோவில்கள் மற்றும் சுற்றுலா தலங்களுக்கு செல்வதற்கு பிற வாகனங்களை நாட வேண்டியுள்ளது. மேலும் பல்வேறு கோவில்கள் தஞ்சை நகர மைய பகுதிகளில் இருந்து சற்று தொலைவிலும் போக்குவரத்து குறைவாக உள்ள பகுதிகளிலும் அமைந்துள்ளது. இந்த இடங்களை உள்ளூர் மற்றும் வெளியூர் மக்கள் அடைவதற்கு குறித்த நேரத்தில் உள்ள பஸ்களையே நம்பி இருக்க வேண்டியுள்ளது.
இதேபோல தொழில் மற்றும் வியாபார ரீதியாகவும் பணியாளர்கள், விற்பனை பிரதிநிதிகள் என பலர் நாள்தோறும் தஞ்சைக்கு வந்த வண்ணம் உள்ளனர். இவர்கள் தங்களுக்கு தேவையான போக்குவரத்தை அமைத்துக்கொள்ள சற்று சிரமப்படுகின்றனர். ஆகையால் திருச்சி ரெயில் நிலையத்தில் இருப்பதுபோல் வாடகை இ-பைக் வசதியை தஞ்சை ரெயில் நிலையத்திலும் ஏற்படுத்தி தந்தால் தங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று சுற்றுலா பயணிகள், தஞ்சை மாநகர மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
Related Tags :
Next Story