ரேஷன் கடை பணியாளர்கள் கருப்பு சட்டை அணிந்து ஆர்ப்பாட்டம்


ரேஷன் கடை பணியாளர்கள் கருப்பு சட்டை அணிந்து ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 9 April 2022 4:09 AM IST (Updated: 9 April 2022 4:09 AM IST)
t-max-icont-min-icon

ரேஷன் கடை பணியாளர்கள் கருப்பு சட்டை அணிந்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

திருச்சி:

அகவிலைப்படி
பொது வினியோகத் திட்டத்திற்கென தனித்துறை உருவாக்கப்பட வேண்டும். அரசு பணியாளர்களுக்கு வழங்கக்கூடிய 31 சதவீத அகவிலைப்படியை ரேஷன் கடை பணியாளர்களுக்கும் வழங்க வேண்டும். சரியான எடையில் தரமான பொருட்களை பொட்டலமாக வழங்க வேண்டும்.
ஓய்வுபெற்ற ரேஷன் கடை பணியாளர்களுக்கு ஓய்வூதியம் வழங்கப்பட வேண்டும். புதிய விற்பனை முனையம் அமைக்கப்பட வேண்டும் என்பது உள்ளிட்ட 11 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு ரேஷன் கடை பணியாளர் சங்கம் சார்பில் மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் திருச்சி கலெக்டர் அலுவலகம் அருகில் நேற்று நடந்தது. 
கருப்பு சட்டை
ஆர்ப்பாட்டத்திற்கு மாநில தலைவர் ஜெயச்சந்திர ராஜா தலைமை தாங்கினார். மாநில பொதுச்செயலாளர் விசுவநாதன் வரவேற்றார். மாநில பொருளாளர் பிரகாஷ், திருச்சி மாவட்ட தலைவர் ரமேஷ் மற்றும் மாநில நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்.
தமிழ்நாடு அரசு நியாய விலைக்கடை பணியாளர்கள் சங்கத்தின் சிறப்பு தலைவர் கு.பாலசுப்பிரமணியன் சிறப்புரையாற்றினார். ஆர்ப்பாட்டத்தில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ரேஷன் கடை விற்பனையாளர்கள், எடையாளர்கள் கலந்து கொண்டனர். இதில் பெரும்பாலானவர்கள் கருப்பு சட்டை அணிந்திருந்தனர். இந்த நிலையில் நேற்று சட்டசபையில் 2 கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டதால் அவர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
இது குறித்து மாநில சிறப்பு தலைவர் கு.பாலசுப்பிரமணியன் கூறியதாவது:-
வரவேற்பு
ரேஷன் கடை பணியாளர்களுக்கான அகவிலைப்படி நிலுவைத்தொகை 17 சதவீதம் வழங்கப்படாமல் இருந்தது. தற்போது சட்டசபையில் அவற்றில் 14 சதவீதம் அகவிலைப்படியை உடனடியாக நிறைவேற்றுவதாக கூட்டுறவுத்துறை அமைச்சர் அறிவித்துள்ளார். இதேபோல் ரேஷன் கடைகளில் அரிசியை பொட்டலமாக வழங்குவது குறித்தும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை நாங்கள் வரவேற்கிறோம். பாராட்டுகிறோம். எங்களது 11 அம்ச கோரிக்கைகளில் இன்னும் 9 கோரிக்கைகள் நிறைவேற்றப்படாமல் உள்ளது. அவற்றையும் விரைவாக நிறைவேற்ற வேண்டும்.
மேலும் 14 சதவீத அகவிலைப்படியை கூட்டுறவு சங்க நிதியில் இருந்து வழங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கூட்டுறவுத்துறையில் நிதி பெரும்பாலும் இருப்பதில்லை. எனவே, பொது வினியோகத் திட்டத்திற்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதியில் இருந்து வழங்க வேண்டும். மேலும் பொது வினியோகத் திட்டத்திற்கென தனித்துறை உருவாக்கப்பட வேண்டும். பி.ஓ.எஸ். என்று சொல்லக்கூடிய விற்பனை முனையம் அமைக்கப்பட வேண்டும். மேலும் மோடம் வழங்கப்பட்டு இணைய சேவை மேம்படுத்தப்பட வேண்டும். அரிசி மட்டுமல்லாது ரேஷன் கடையில் வழங்கப்படும் சர்க்கரை, பருப்பு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களையும் பொட்டலமாக வழங்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.

Next Story