குடோனில் பதுக்கிய 199 மூட்டை ரேஷன் அரிசி பறிமுதல்
குடோனில் பதுக்கிய 199 மூட்டை ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.
திருச்சி:
குடோனில் அதிரடி சோதனை
திருச்சி அரியமங்கலம் கணபதிநகர் பகுதியில் உள்ள ஒரு குடோனில் ரேஷன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீஸ் துணை சூப்பிரண்டு சுதர்சனம், இன்ஸ்பெக்டர் விவேகானந்தன், சப்-இன்ஸ்பெக்டர் அலாவுதீன் ஆகியோர் தலைமையிலான போலீசார் நேற்று மாலை அந்த குடோனில் புகுந்து அதிரடியாக சோதனை நடத்தினார்கள்.
போலீசாரை கண்டதும் அங்கிருந்த ஒருவர் தப்பி ஓடிவிட்டார். குடோனில் நடத்திய சோதனையில் அங்கு மூட்டை, மூட்டையாக ரேஷன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டு இருந்தது, தெரியவந்தது.
ரேஷன் அரிசி பறிமுதல்
இதையடுத்து அங்கிருந்த தலா 40 கிலோ எடை கொண்ட 199 ரேஷன் அரிசி மூட்டைகளையும் (மொத்தம் 7,960 கிலோ), அரிசி கடத்தலுக்கு பயன்படுத்திய ஒரு மினி வேனையும் போலீசார் பறிமுதல் செய்தனர். விசாரணையில் குடோனை வாடகைக்கு எடுத்து அங்கு ரேஷன் அரிசியை பதுக்கி, அதனை அரைத்து மாவாக்கி வெளிச்சந்தையில் விற்பனை செய்து வருவது தெரியவந்தது. இது தொடர்பாக உணவு கடத்தல் தடுப்புப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து, குடோனில் இருந்து தப்பி ஓடிய அரியமங்கலத்தை சேர்ந்த அன்வரை (வயது 40) தேடி வருகிறார்கள்.
Related Tags :
Next Story