பட்டா மோசடியில் ஈடுபட்ட அ.தி.மு.க. பிரமுகர்கள் மீது நடவடிக்கை கோரி சாலை மறியல்
பட்டா மோசடியில் ஈடுபட்ட அ.தி.மு.க. பிரமுகர்கள் மீது நடவடிக்கை கோரி சாலை மறியல் நடைபெற்றது.
துறையூர்:
சாலை மறியல்
திருச்சி மாவட்டம் துறையூர் அருகே உள்ள கோவிந்தபுரம் கிராமத்தில் கடந்த 1995-ம் ஆண்டு ஆதிதிராவிடர்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்கப்பட்டது. இதில் 5 பேர் வீடு கட்டி குடியிருந்து வருவதாகவும், மற்ற இடங்கள் காலியாக உள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும் காவல்துறையினர் உதவியுடன் தரிசு நிலத்தை அளவீடு செய்வதற்காக சென்ற நிலையில் ஒரு தரப்பினர் இடத்தினை அளவீடு செய்யக்கூடாது என்றும், மற்றொரு தரப்பினர் அளவீடு செய்து தரக்கோரியும் தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து ஒரு தரப்பினர் அந்த பட்டாவுக்கான இடங்கள் அளந்து தரக்கோரியும், 202 பேருக்கு வழங்கப்பட்ட இலவச வீட்டு மனைகளில் 17 பேருடைய வீட்டுமனைப் பட்டாக்களை சரி பார்த்து தருவதாக கூறி அவற்றை வேறு நபர்களுக்கு விற்றும், இடத்தை அளந்து தருவதாக பணம் பெற்றும் மோசடி செய்ததாக அ.தி.மு.க. பிரமுகர்கள் 2 பேர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரியும் துறையூரில் திருச்சி - ஆத்தூர் சாலையில் கொளுத்தும் வெயிலில் ஏராளமான பொதுமக்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
முற்றுகை
அப்போது துறையூர் நோக்கி வந்த திட்ட அலுவலர் மற்றும் ஊராட்சி ஒன்றிய ஆணையர் வாகனங்களை அவர்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதுபற்றி தகவலறிந்த துறையூர் போலீசார் மற்றும் வருவாய்த்துறையினர் மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இதில் உடன்பாடு ஏற்பட்டதால் பொதுமக்கள் மறியலை கை விட்டு கலைந்து சென்றனர். இந்த மறியலால் அந்த சாலையில் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
நீக்கம் செய்ய வேண்டும்
மேலும் இந்த சம்பவத்தை தொடர்ந்து துறையூர் தாலுகா அலுவலகத்தில் தாசில்தார் புஷ்பராணி தலைமையில் ஆதிதிராவிடர் நல தனி தாசில்தார் கண்ணகி உள்ளிட்டோர் இருதரப்பினர் இடையே அமைதிப் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். இதில், 1995-ம் ஆண்டு நிலம் கையகப்படுத்தப்பட்டு இலவச வீட்டு மனை பட்டா வழங்கப்பட்டபோது வெளியூரில் குடியிருந்து வந்த சுமார் 49 பேருக்கு பட்டா வழங்கப்பட்டதை நீக்கம் செய்ய வேண்டும்.
அப்போது அரசு ஊழியர்களாக இருந்த சுமார் 36 பேருக்கு வழங்கப்பட்ட பட்டாவை நீக்க செய்ய வேண்டும். ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்களுக்கு வழங்கப்பட்ட பட்டாவை நீக்கம் செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது. இது தொடர்பான ஆவணங்களை ஒரு தரப்பினர் கூட்டத்தில் சமர்ப்பித்தனர்.
கோரிக்கை
மற்றொரு தரப்பினர் 1995-ம் ஆண்டு நில கையகப்படுத்தப்பட்டு இலவச வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டவர்களுக்கு மட்டுமே விசாரணை செய்து அளந்து தனிப்பட்டா வழங்க வேண்டும் என்றும், புதிதாக யாருக்கும் பட்டா வழங்கக்கூடாது என்றும் கோரிக்கை வைத்தனர்.
இதையடுத்து தாசில்தார் பேசினார். மேலும் இது தொடர்பாக ஆதிதிராவிடர் நலத்துறை மூலம் விசாரணை நடத்தி, மாவட்ட நிர்வாகம் முடிவு எடுக்கும் வரை மேற்படி இடத்தில் எவ்வித கட்டுமானங்களும், நில அளவீடுகளையும் செய்ய வலியுறுத்த மாட்டோம் என்று இருதரப்பினரும் ஒப்புக்கொண்டனர். இந்நிலையில் காலையில் இருந்து போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் மற்றும் முதியவர்களில் சிலருக்கு மயக்கம் ஏற்படும் நிலை ஏற்பட்டது. மேலும் சிலர் காலையில் சாப்பிடாமல் இருந்தனர். அவர்கள் போலீசார் உதவியுடன் அங்கிருந்து அனுப்பி வைக்கப்பட்டனர்.
Related Tags :
Next Story