செல்போன் கோபுரத்தில் ஏறி பெண் திடீர் போராட்டம்


செல்போன் கோபுரத்தில் ஏறி பெண் திடீர் போராட்டம்
x
தினத்தந்தி 9 April 2022 4:22 AM IST (Updated: 9 April 2022 4:22 AM IST)
t-max-icont-min-icon

சங்கரன்கோவிலில் செல்போன் கோபுரத்தில் ஏறி பெண் திடீர் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

சங்கரன்கோவில்:
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள பெருங்கோட்டூரைச் சேர்ந்த ஆறுமுகம் மகள் மதி (வயது 35). இவர் நேற்று மாலை சங்கரன்கோவில் கக்கன்நகர் பகுதிக்கு வந்து, திடீரென அங்குள்ள செல்போன் கோபுரத்தில் ஏறி உச்சிக்கு சென்றார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதியினர் சங்கரன்கோவில் டவுன் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனே போலீசாரும், தீயணைப்பு படையினரும் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். அப்போது பலத்த காற்றுடன் மழை பெய்ததால், செல்போன் கோபுரத்தில் இருந்து இறங்கி வருமாறு மதியிடம் கூறினர். இதையடுத்து அவர் கீழே இறங்கி வந்தார். 

பின்னர் அவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது மதி கூறுகையில், ‘அறக்கட்டளை நடத்தி வரும் ஒருவர் எனக்கு வேலை வாங்கி தருவதாக கூறியதால் அவரிடம் ரூ.3 லட்சம் கொடுத்தேன். மேலும் எனது நண்பர்கள், உறவினர்கள் உள்பட 18 பேரிடம் தலா ரூ.3 லட்சம் வாங்கி அதையும் அவரிடம் கொடுத்தேன். ஆனால் ஒரு வருடம் ஆகியும் யாருக்கும் வேலை வாங்கி தராததால், பணத்தை திரும்ப தருமாறு கேட்டேன். அதற்கு அவர் எந்த பதிலும் தெரிவிக்கவில்லை. இதனால் பாதிக்கப்பட்டவர்கள் பலர் ஏற்கனவே சேர்ந்தமரம் போலீசிலும், அதன்பிறகு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திலும் புகார் அளித்தோம். ஆனால் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. எனவே மோசடியில் ஈடுபட்டவர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி இந்த போராட்டத்தில் ஈடுபட்டேன்’ என்றார். விசாரணைக்கு பிறகு போலீசார் அவரை அனுப்பி வைத்தனர். இந்த சம்பவத்தால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. 



Next Story