நீடாமங்கலம், வடுவூர் பகுதி கோவில்களில் ராமநவமி திருவிழா


நீடாமங்கலம், வடுவூர் பகுதி கோவில்களில் ராமநவமி திருவிழா
x
தினத்தந்தி 10 April 2022 12:00 AM IST (Updated: 9 April 2022 5:59 PM IST)
t-max-icont-min-icon

நீடாமங்கலம், வடுவூர் பகுதி கோவில்களில் ராமநவமி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

நீடாமங்கலம்:-

நீடாமங்கலம், வடுவூர் பகுதி கோவில்களில் ராமநவமி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. 

நீடாமங்கலம் சந்தானராமர் கோவில்

தஞ்சையை ஆட்சி புரிந்த மராட்டிய மன்னர் பிரதாப சிம்மரால் 1761-ம் ஆண்டு நீடாமங்கலத்தில் சந்தானராமர் கோவில் கட்டப்பட்டது. மன்னர் தம்பதியினருக்கு புத்திர பாக்கியம் அருளியதால் இக்கோவில் கட்டப்பட்டதாக தலவரலாறு கூறுகிறது. சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான முத்துசுவாமி தீட்சதரால் பாடல் பெற்றது என்ற சிறப்பு இக்கோவிலுக்கு உண்டு. 
புத்திர பாக்கியம் இல்லாதவர்கள் சந்தானகோபால ஜெபம் செய்து சீதா, லெட்சுமண, அனுமன் சமேத சந்தானராமரை வழிபட்டால் புத்திர பாக்கியம் பெறலாம் என்பது ஐதீகம். பல்வேறு சிறப்புகளை கொண்ட இக்கோவிலில் ராமநவமி திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதை முன்னிட்டு சீதா, லெட்சுமண, அனுமன் சமேத சந்தானராமர் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள், அலங்காரம் செய்யப்பட்டு மகாதீபாராதனை காட்டப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். திருவிழா வருகிற 19-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) வரை நடக்கிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் தக்கார் ரமேஷ், ஆய்வாளர் தமிழ்மணி, செயல்அலுவலர் மணிகண்டன் மற்றும் பணியாளர்கள் செய்து வருகிறார்கள். 

வடுவூர் கோதண்டராமர் கோவில்

அதேபோல் வடுவூரில் உள்ள கோதண்டராமர் கோவிலில் ராமநவமி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. அப்போது கோதண்டராமர் வில்லேந்திய திருக்கோலத்தில் கொடிமரம் முன்பு எழுந்தருளினார். பின்னர் மாலை சீதாதேவி, லட்சுமணன், அனுமன் சமேதராக கோதண்டராமர் திருக்கல்யாண கோலத்தில் வீதி உலா வந்தார். 
விழாவில் இன்று (ஞாயிற்றுக்கிழமை), சூரிய பிரபை, நாளை (திங்கட்கிழமை) வெள்ளி சேஷ வாகனத்தில் கோதண்டராமர் அருள்பாலிக்கும் நிகழ்ச்சிகளும், 12-ந் தேதி கருடசேவையும் நடக்கிறது. கொடியேற்று நிகழ்ச்சியில் இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் ஹரிஹரன், செயல் அலுவலர் சத்தியசீலன் மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். 

Next Story