இடைக்கால கூலி உயர்வு வழங்க வேண்டும்


இடைக்கால கூலி உயர்வு வழங்க வேண்டும்
x

டேன்டீ தொழிலாளர்களுக்கு இடைக்கால கூலி உயர்வு வழங்க வேண்டும் என்று குன்னூரில் நடந்த கலந்தாய்வு கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

குன்னூர்

டேன்டீ தொழிலாளர்களுக்கு இடைக்கால கூலி உயர்வு வழங்க வேண்டும் என்று குன்னூரில் நடந்த கலந்தாய்வு கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. 

கலந்தாய்வு கூட்டம்

நீலகிரி மாவட்டம் மற்றும் கோவை மாவட்டம் வால்பாறையில் தமிழ்நாடு அரசு தேயிலை தோட்ட கழகம்(டேன்டீ) செயல்பட்டு வருகிறது. இங்கு சுமார் 10 ஆயிரம் தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். டேன்டீ தலைமை அலுவலகம், குன்னூரில் உள்ளது. இந்த அலுவலகத்தில், தொழிலாளர்களின் நலன் மற்றும் நிர்வாக சீர்திருத்தம் குறித்த கலந்தாய்வு கூட்டம் இன்று நடைபெற்றது. இதற்கு டேன்டீ நிர்வாக இயக்குனர் மஞ்சுநாதா தலைமை தாங்கினார். 

இதில் பணியாளர் மற்றும் தொழில் உறவு மேலாளர் கண்ணன், வால்பாறை தொழிற்சங்க கூட்டமைப்பு தலைவர் வால்பாறை அமீது, எல்.பி.எப். தொழிற்சங்கத்தை சேர்ந்த வினோத்குமார், கேசவ மருகன், மாடசாமி, ஏ.டி.பி. தொழிற்சங்கத்தை சேர்ந்த ஜெயராமன், செல்லைய்யா மற்றும் தொழிற்சங்க நிர்வாகிகள் ஜெயபால், மோகன், சுப்பிரமணியம், செல்வராஜ், போஜராஜ், சுரேஷ், ராஜகோபால் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

தினக்கூலி உயர்வு

கூட்டத்தில் தனியார் தேயிலை தோட்டங்களில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 1-ந் தேதி முதல் 409 ரூபாய் 83 பைசா தினக்கூலி வழங்கப்படுகிறது. ஆனால் டேன்டீ தொழிலாளர்களுக்கு 350 ரூபாய் தினக்கூலியாக வழங்கப்படுகிறது. இதனை கணக்கிடும்போது தனியார் தேயிலை தோட்ட தொழிலாளர்களை விட டேன்டீ தொழிலாளர்களுக்கு 60 ரூபாய் குறைவாக வழங்கப்படுகிறது.

எனவே டேன்டீ தொழிலாளர்களுக்கு தினக்கூலியாக 425 ரூபாய் 40 பைசா வழங்கப்பட வேண்டும். இது தொடர்பாக இறுதி அரசாணை வரும் வரை தனியார் தோட்ட தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் தினக்கூலியை இடைகால தினக்கூலியாக டேன்டீ தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டும் என்று தொழிற்சங்க நிர்வாகிகள் வலியுறுத்தினர். 

அரசுக்கு பரிந்துரை

இதற்கு பதிலளித்த நிர்வாக இயக்குனர் மஞ்சுநாதா, அது தொடர்பாக தமிழக அரசிற்கு பரிந்துரை செய்வதாக கூறினார். மேலும் ேடன்டீ தொழிலாளர்களின் குறைகள் மற்றும் நிர்வாக சீர்திருத்தங்களுக்கு 3 குழுக்கள் அமைத்து தீர்வு காண முடிவு செய்யப்பட்டது. 


Next Story