தினத்தந்தி புகார் பெட்டி


தினத்தந்தி புகார் பெட்டி
x
தினத்தந்தி 9 April 2022 8:20 PM IST (Updated: 9 April 2022 8:20 PM IST)
t-max-icont-min-icon

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 91761 28888 என்ற வாட்ஸ்-அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

சுகாதாரக்கேடு 

நெல்லை மாநகராட்சி 48-வது வார்டுக்கு உட்பட்ட பகுதியில் சேகரிக்கப்படும் குப்பையானது அம்பை மெயின் ரோட்டின் ஓரம் கொட்டப்படுகிறது. இதனால் அந்த பகுதியில் துர்நாற்றம் வீசுவதோடு சுகாதாரக்கேடும் ஏற்படுகிறது. அந்த வழியாக செல்லும் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகிறார்கள். எனவே, இங்கு கொட்டப்படும் குப்பைகளை வேறு இடத்தில் கொட்டுவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்.
மணிகண்டன், மேலக்கருங்குளம். 

பஸ்கள் முறையாக இயக்கப்படுமா?

நெல்லை டவுன் பொருட்காட்சி திடல் மற்றும் பாளையங்கோட்டை பஸ் நிலையத்தில் இருந்து என்.ஜி.ஓ.-ஏ மற்றும் பி காலனிகளுக்கு கால அட்டவணை படி அரசு டவுன் பஸ்கள் இயக்கப்பட்டு வந்தது. இந்த பஸ்கள் கடந்த சில நாட்களாக ஊருக்குள் வருவது இல்லை. அப்படி வரும் ஒரு சில டவுன் பஸ்கள் என்.ஜி.ஓ.-ஏ காலனியில் சர்ச் பஸ் நிறுத்தம் வரை வராமல் பாதிலேயே திரும்பிச் சென்று விடுகின்றன. இதனால் அந்த பஸ்களை நம்பி இருக்கும் பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள், அலுவலகத்திற்கு செல்பவர்கள் மிகவும் பாதிக்கப்படுகிறார்கள். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்த பஸ்களை முறையாக இயக்குவதற்கு நடவடிக்கை எடுக்க கேட்டுக் கொள்கிறேன்.
மல்லிகா சுப்பையா, பாளையங்கோட்டை.

குண்டும், குழியுமான சாலை

பாளையங்கோட்டை - தூத்துக்குடி மெயின் ரோட்டில் உள்ள கே.டி.சி. நகரில் அமைந்துள்ள மங்கம்மாள் சாலை மிக முக்கியமான சாலையாகும். கே.டி.சி. நகர் - சீவலப்பேரி ரோட்டை இணைக்கும் 3 கிலோ மீட்டர் தூரமுள்ள இந்த சாலை முற்றிலும் சேதமடைந்து, குண்டும் குழியுமாக போக்குவரத்திற்கு மிகுந்த சிரமத்தை ஏற்படுத்துகிறது. தினமும் ஏராளமான வாகன ஓட்டிகள் இந்த சாலையில் வாகனங்களை இயக்குவதற்கு மிகுந்த சிரமத்திற்குள்ளாகிறார்கள். மேலும் கே.டி.சி. நகரில் அமைந்துள்ள 7 சாலைகளுமே மோசமான நிலையில் உள்ளது. ஆகவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்த சாலைகளை உடனடியாக சரிசெய்ய வேண்டுகிறேன்.
கோயில்ராஜ், கே.டி.சி. நகர்.

சாலையில் தேங்கிய மழைநீர் 

தென்காசி-மதுரை தேசிய நெடுஞ்சாலை கடையநல்லூரில் மக்கள் நெருக்கடி அதிகம் உள்ள மணிக்கூண்டு அருகில் சமீபத்தில் பெய்த மழையால் தண்ணீர் சாலையில் தேங்கி கிடக்கிறது. இதில் கொசுக்கள் உற்பத்தியாகி நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே, தேங்கிய மழைநீரை அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஹபிபுல்லா, கடையநல்லூர்.

ஆபத்தான வளைவு

அம்பை-தென்காசி மெயின்ரோடு முதலியார்பட்டி அய்யம்பிள்ளைகுளம் பகுதியிலும், ரகுமத்நகர் பகுதியிலும் ஆபத்தான வளைவு உள்ளது. அந்த வளைவு பகுதியில் சாலையும் குறுகலாக உள்ளது. இதனால் அந்த பகுதியில் வாகனங்கள் அடிக்கடி விபத்தில் சிக்குகிறது. எனவே, வாகன ஓட்டிகள் நலன் கருதி அந்த பகுதியில் சாைலயை அகலப்படுத்துவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கேட்டுக்கொள்கிறேன்.
திருக்குமரன், கடையம்.

வேகத்தடை வேண்டும் 

வீரகேரளம்புதூர் தாலுகா கீழக்கலங்கல் பெரிய கிராமத்தில் கீழ் பஸ் நிறுத்தம் 4 முக்கு பகுதி உள்ளது. இதன் அருகில் பள்ளிக்கூடமும் உள்ளது. இந்த பஸ் நிறுத்தம் பகுதியில் தெற்கில் இருந்து வரும் வாகனங்களும், கிழக்கில் இருந்து வரும் வாகனங்களும் திரும்புபோது மோதி விபத்துக்குள்ளாகிறது. எனவே, இந்த பகுதியில் வேகத்தடை அமைத்தால் நன்றாக இருக்கும். இதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
தட்சணாமூர்த்தி, கீழக்கலங்கல்.

தாழ்வாக தொங்கும் மின்கம்பி

தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகநேரி எஸ்.எஸ்.கோவில் வடக்கு 2-வது தெருவில் மின்கம்பி மிகவும் தாழ்வாக தொங்கிக் கொண்டு இருக்கிது. இதனால் ஆபத்து ஏற்படும் நிலை உள்ளது.
மேலும், எஸ்.எஸ்.கோவில் தெருவில் உள்ள டிரான்ஸ்பார்மர் அருகில் உள்ள மின்கம்பம் பழுதடைந்து முறிந்து விழும் நிலையில் காணப்படுகிறது. இதன் காரணமாக அந்த வழியாக செல்லும் பொதுமக்கள் அச்சப்படுகிறது. ஆகவே மின்கம்பி, மின்கம்பம் ஆகியவற்றை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சரிசெய்வார்களா?
கணேசன், ஆறுமுகநேரி.



Next Story