கோமாரி நோய் தடுப்பூசி முகாம்

விழுப்புரம் மாவட்டத்தில் 4,83,209 கால்நடைகள் பயன்பெறும் வகையில் கோமாரி நோய் தடுப்பூசி முகாமை கலெக்டர் மோகன் தொடங்கி வைத்தார்.
கோமாரி நோய் தடுப்பூசி முகாம்
Published on

விழுப்புரம்,

விழுப்புரம் காகுப்பத்தில் நேற்று கால்நடை பராமரிப்புத்துறை மற்றும் ஆவின் நிர்வாகம் இணைந்து கால்நடைகளுக்கான கோமாரி நோய் தடுப்பூசி முகாம் தொடக்க நிகழ்ச்சி நடைபெற்றது. முகாமிற்கு மாவட்ட கலெக்டர் மோகன் தலைமை தாங்கி, முகாமை தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசியதாவது:-

கால்நடைகள் கோமாரி நோயால் பாதிக்கப்படுவதை தடுத்திடும் வகையில், கோமாரி நோய் சிறப்பு முகாம் மாவட்டந்தோறும் நடைபெறுகிறது. அந்த வகையில் விழுப்புரம் மாவட்டத்தில் இந்த சிறப்பு முகாம் இன்று (அதாவது நேற்று) முதல் தொடங்கி 21 நாட்களுக்கு நடைபெறுகின்றன. ஒவ்வொரு நாளும் காலை 6 மணி முதல் 9 மணி வரையிலும், மாலை 3 மணி முதல் 6 மணி வரையிலும் கிராமங்கள்தோறும் கால்நடை மருத்துவத்துறையின் அலுவலர்கள் பணியாளர்கள் கொண்ட குழு தலைமையில் சிறப்பு முகாம்கள் நடைபெறுகின்றன.

4,83,209 கால்நடைகள்

இதன் மூலம் மாவட்டத்தில் 4,83,209 கால்நடைகள் பயன்பெறும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது. இக்காலக்கட்டங்களில் நடைபெறும் சிறப்பு முகாம்களை பயன்படுத்த தவறிய கால்நடை வளர்ப்போர் தங்கள் கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி போட்டுக்கொள்ள கூடுதலாக 5 நாட்கள் முகாம் நடத்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. கால்நடைகளுக்கு கோமாரி நோய் தாக்குதல் ஏற்பட்டால் பால் கறக்கும் கறவை மாடுகளுக்கு பால் உற்பத்தித் திறன் குறைவதுடன், மாட்டிற்கும் உடல்நிலை பாதிப்பை ஏற்படுத்தும். பால் உற்பத்தி திறன் குறைவு ஏற்பட்டால் கால்நடை வளர்ப்போருக்கான பொருளாதார நிலை குறையும். இதனை தடுத்திடும் வகையில், கால்நடை வளர்ப்போருக்கு பொருளாதார நெருக்கடியை தடுத்திடவும், கறவை மாடுகளை பாதுகாத்திடவும் 100 சதவீதம் கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசியை செலுத்தி முற்றிலும் தடுத்து கால்நடைகளை நல்ல முறையில் பாதுகாத்து பயன்பெற்றுக்கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

பின்னர் கால்நடைகளுக்கான கோமாரி நோய் தடுப்பிற்கான தடுப்பூசி வழங்கும் பணியினை தொடங்கி வைத்ததுடன், கால்நடைகளுக்கு அவ்வப்போது குறைவு ஏற்படும் புரதச்சத்துக்களை அதிகப்படுத்தும் வகையிலான தாது உப்புக்களை கால்நடை வளர்ப்போர்களுக்கு வழங்கினார். இம்முகாமில் கால்நடை பராமரிப்புத்துறை இணை இயக்குனர் மனோகரன், விழுப்புரம் நகரமன்ற தலைவர் சக்கரை தமிழ்ச்செல்வி, கால்நடை பராமரிப்புத்துறை உதவி இயக்குனர்கள் தாமோசாந்தி, மோகன், கால்நடை பராமரிப்புத்துறை உதவி மருத்துவர்கள் பாலாஜி, அண்ணாமலை, சிவா, சதானந்தம், உஷா, நந்தினி, நகரமன்ற கவுன்சிலர்கள் அமுதா, கன்னிகா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com