சின்னமனூர் அருகே இன்ஸ்பெக்டரின் நூதன நடவடிக்கையால் திருடுபோன 12 பவுன் நகை மீட்பு


சின்னமனூர் அருகே இன்ஸ்பெக்டரின் நூதன நடவடிக்கையால் திருடுபோன 12 பவுன் நகை மீட்பு
x
தினத்தந்தி 9 April 2022 9:28 PM IST (Updated: 9 April 2022 9:28 PM IST)
t-max-icont-min-icon

சின்னமனூர் அருகே திருடுபோன 12 பவுன் நகை இன்ஸ்பெக்டரின் நூதன நடவடிக்கையால் மீட்கப்பட்டது.

சின்னமனூர்:

நகை திருட்டு
தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே உள்ள மார்க்கையன்கோட்டை கிழக்கு காலனியை சேர்ந்தவர் வெள்ளைச்சாமி. இவரது மகள் ரெஜினா திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியில் வசித்து வருகிறார். 
இந்தநிலையில் மார்க்கையன்கோட்டையில் பேச்சியம்மன் கோவில் திருவிழா நடந்தது. இந்த திருவிழாவுக்காக பெற்றோர் ஊருக்கு ெரஜினா வந்தார். திருவிழாவில் ஆடல்-பாடல் நிகழ்ச்சி நடந்தது. இதை பார்ப்பதற்காக வெள்ளைச்சாமி, ரெஜினா மற்றும் குடும்பத்தினர் வீட்டின் கதவை பூட்டி விட்டு சாவியை அங்குள்ள ஜன்னலில் வைத்து விட்டு சென்றனர்.
பின்னர் திரும்பி வந்து பார்த்தபோது வீட்டில் பீரோவில் இருந்த 12 பவுன் நகை மற்றும் ரூ.20 ஆயிரத்தை காணவில்லை. 

போலீசார் விசாரணை
இதுகுறித்த புகாரின் பேரில் சின்னமனூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சேகர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். இதையடுத்து இன்ஸ்பெக்டர் மற்றும் போலீசார் திருடுபோன வீடு இருக்கும் பகுதியில் விசாரணை செய்தனர். அப்போது வெள்ளைச்சாமி குடும்பத்தினர் வீட்டின் கதவை பூட்டி விட்டு சாவியை ஜன்னலில் வைத்து செல்வதை  வழக்கமாக வைத்து இருப்பதாக தெரிவித்தனர். எனவே நகையை வெளியூர் ஆட்கள் யாரும் வந்து திருடியிருக்க வாய்ப்பில்லை. இந்த பகுதியில் வசிப்பவர்கள்தான் நகைகளை திருடி இருக்கக்கூடும் என்று போலீசார் சந்தேகித்தனர்.
இதையடுத்து இன்ஸ்பெக்டர் அந்த பகுதியில் உள்ள அனைவரையும் அழைத்து பேசினார். 

மாட்டு சாணம்
அப்போது அவர், வெள்ளைச்சாமி வீட்டில் திருடு போன நகையை இந்த பகுதியில் வசிப்பவர்கள் தான் திருடி உள்ளனர். எனவே திருடியவர்கள் மாட்டு சாணத்தை உருண்டையாக பிடித்து அதில் நகையை வைத்து இங்கு வைக்கப்படும் அண்டாவில் போட்டுவிட்டு செல்லுங்கள். நாங்கள் எடுத்துக்கொள்கிறோம். இல்லையென்றால் நகையை திருடியவர்கள் குறித்து கண்டறிய மோப்ப நாய் மற்றும் கைரேகை நிபுணர்கள் அழைக்கப்பட்டு உடனடியாக கண்டுபிடித்துவிடுவோம். மேலும் சம்பந்தப்பட்டவர்களை கைது செய்ய நடவடிக்கை எடுப்போம். எனவே கைது நடவடிக்கையில் இருந்து தப்பித்துக்கொள்ள திருடிய நகையை மாட்டு சாணத்தில் வைத்து போட்டு விடுங்கள் என்று அறிவுறுத்தினார். 
அதன்படி அந்த பகுதியில் போலீசார் பெரிய அண்டா வைத்தனர். பின்னர் அந்த பகுதியில் வசிக்கும் சுமார் 30-க்கும் மேற்பட்டவர்கள் மாட்டு சாணத்தை உருண்டையாக பிடித்து அண்டாவில் போட்டு விட்டு சென்றனர். 

நகை மீட்பு
பின்னர் போலீசார் அண்டாவில் தண்ணீர் ஊற்றி மாட்டு் சாணத்தை கரைத்தனர். அப்போது அதில் இருந்து திருடுபோன 12 பவுன் நகை கிடந்தது. இதையடுத்து போலீசார் நகையை மீட்டு உரியவர்களிடம் ஒப்படைத்தனர். இன்ஸ்பெக்டரின் நூதன நடவடிக்கையால் திருடு போன நகைகள் மீட்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. 
எனினும் திருடுபோன ரூ.20 ஆயிரம் தொடர்பாக சம்பந்தப்பட்டவர்கள் மீது சட்ட நடவடிக்கை தொடரும் என்று போலீசார் தெரிவித்தனர்.



Next Story