மீனவப்பெண் மண்எண்ணெய்யுடன் வந்ததால் பரபரப்பு
மீனவப்பெண் மண்எண்ணெய்யுடன் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
ராமநாதபுரம்,
ராமநாதபுரத்தில் மீனவர் நலத்துறை அமைச்சகத்தின் சார்பில் இலங்கை அரசால் பிடிக்கப்பட்டு பழுதடைந்த மீன்பிடி படகுகளுக்கு முதல்-அமைச்சர் நிவாரண நிதியில் இருந்து தலா ரூ.5 லட்சம் வழங்கும் விழா கலெக்டர் அலுவலக வளாகத்தில் நடைபெற்றது.விழாவில் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கலந்துகொண்டு ரூ.2 கோடியே 78 லட்சத்து 78 ஆயிரத்து 13 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மீனவர்களுக்கு வழங்கினார். முன்னதாக அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் விழா நடந்த மேடைக்கு வந்தபோது அங்கு கூடி இருந்த 4 மீனவர்கள் அமைச்சரை முற்றுகையிட்டு தாங்களும் பாதிக்கப்பட்டு உள்ளதாகவும் தங்களுக்கு அரசு நிவாரண நிதி வழங்கவில்லை என்றும் அதிகாரிகள் தயாரித்த பட்டியலில் தங்கள் பெயர் விடுபட்டு உள்ளதாகவும் இதுகுறித்து கூறியபோதும் நடவடிக்கை எடுக்கவில்லை எனக்கூறி உடனடியாக நிவாரணம் வழங்க வேண்டும் என்று கூறினர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து சட்டமன்ற உறுப்பினர் காதர்பாட்சா முத்துராமலிங்கம் மீனவர்களை சமாதானப்படுத்தி உங்களுக்கு நிச்சயம் நிவாரணம் வழங்கப்படும் என்று உறுதி அளித்தார். இதைத் தொடர்ந்து விழா நடைபெற்றது. இந்நிலையில் விழா முடிந்து அமைச்சர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் கிளம்பிய நிலையில் மேற்கண்ட விடுபட்ட மீனவர்களில் மீனவ பெண் ஒருவர் தான் கொண்டுவந்திருந்த மண்எண்ணெய் பாட்டிலை எடுத்து காட்டி தங்களுக்கு உடனடியாக நிவாரணம் வழங்காவிட்டால் தற்கொலை செய்துகொள்ளும் முடிவில் வந்ததாகவும் தங்களிடம் உறுதியளித்து உள்ளதால் தற்கொலை முடிவை கைவிட்டு உள்ளதாகவும் விரைவில் நிவாரணம் வழங்காவிட்டால் இதே இடத்தில் மீண்டும் தற்கொலை செய்து கொள்வதாகவும் கூறினார். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதைக்கண்ட அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் அந்தப் பெண்ணிடம் இருந்த மண்எண்ணெய்யை பறித்து சென்றனர்.
Related Tags :
Next Story