கரூரில் வாகன விற்பனை நிலையத்தில் பயங்கர தீ விபத்து; 50 மோட்டார் சைக்கிள்கள் எரிந்து நாசம்
கரூரில் இருசக்கர வாகன விற்பனை நிலையத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில், 50-க்கும் மேற்பட்ட மோட்டார் சைக்கிள்கள் எரிந்து நாசமானது.
கரூர்,
வாகன விற்பனை நிலையம்
கரூர்-கோவை சாலையில் வைபவ் பஜாஜ் இருசக்கர வாகன விற்பனை நிலையம் உள்ளது. இங்கு விற்பனைக்காக 100-க்கும் மேற்பட்ட புதிய மோட்டார் சைக்கிள்களும், சர்வீசுக்காக ஏராளமான மோட்டார் சைக்கிள்களும் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. நேற்றுமுன்தினம் இரவு வழக்கம்போல் பணிமுடிந்து ஊழியர்கள் வாகன விற்பனை நிலையத்தை பூட்டிவிட்டு சென்றனர்.
இந்தநிலையில் இரவு 10 மணியளவில் இந்த விற்பனை நிலையத்தின் சர்வீஸ் நிலைய பகுதியில் இருந்து கரும்புகை வந்துள்ளது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் கரூர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் நிலைய அலுவலர் விஜயகுமார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் 2 தீயணைப்பு வாகனங்களுடன் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.
எரிந்து நாசம்
பின்னர் தீயணைப்பு வீரர்கள் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைக்க போராடினர். ஆனால் தீ மளமளவென மற்ற பகுதிகளுக்கும் பரவியதால் தீயை கட்டுக்குள் கொண்டு வரமுடியவில்லை. இதையடுத்து புகழூர் தீயணைப்பு நிலைய வாகனம் மற்றும் தீயணைப்பு வீரர்களும் வரவழைக்கப்பட்டனர். மேலும் தனியார் லாரிகள் மூலம் தண்ணீர் கொண்டு வரப்பட்டு தீயை அணைக்க தீயணைப்பு வீரர்கள் போராடினர்.
சுமார் 3 மணி நேர போராட்டத்திற்கு பிறகு தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த விபத்தில் 50-க்கும் மேற்பட்ட மோட்டார் சைக்கிள்கள் மற்றும் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமானது. மின்கசிவு காரணமாக தீவிபத்து ஏற்பட்டதா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Related Tags :
Next Story