கரூர் அருகே தனியார் ஒப்பந்ததாரரின் லாரிக்கு தீவைப்பு
கரூர் அருகே நள்ளிரவில் தனியார் ஒப்பந்ததாரரின் லாரிக்கு தீவைத்துவிட்டு தப்பி ஓடிய கும்பலை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
கரூர்,
மர்ம ஆசாமிகள்
கரூர்-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு லாரி ஒன்று எம்.சாண்ட் மணல் ஏற்றிக்கொண்டு சென்று கொண்டு இருந்தது. அந்த லாரியை மதுரையை சேர்ந்த அன்பழகன் (வயது 29) என்பவர் ஓட்டிச்சென்றுள்ளார். அவருடன் மாயனூரை சேர்ந்த சூப்பர்வைசர் கிருஷ்ணமூர்த்தி உடன் சென்றார்.
கோடங்கிபட்டி பிரிவு அருகே லாரி வந்தபோது 20-க்கும் மேற்பட்ட மர்ம ஆசாமிகள் அந்த லாரியை தடுத்து நிறுத்தினர்.
லாரிக்கு தீவைப்பு
அதன்பின்னர் அந்த ஆசாமிகள் இந்த லாரி யாருடையது என டிரைவரிடம் கேட்டுள்ளனர். அதற்கு அந்த டிரைவர் தனியார் ஒப்பந்ததாரரின் நிறுவனத்திற்கு சொந்தமானது என கூறியுள்ளார். இதையடுத்து, அந்த கும்பல் டிரைவரையும், சூப்பர்வைசரையும் சரமாரியாக தாக்கியதுடன் அந்த லாரிக்கு தீ வைத்து விட்டு அங்கிருந்து தப்பி ஓடினர்.
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்தவுடன் தாந்தோறிமலை போலீசார் மற்றும் கரூர் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீயை அணைத்து கட்டுக்குள் கொண்டு வந்தனர். இருப்பினும் லாரி சேதம் அடைந்தது.
தப்பி ஓடிய கும்பலுக்கு வலைவீச்சு
மர்ம ஆசாமிகள் தாக்கியதில் காயமடைந்த லாரி டிரைவர் அன்பழகன் மற்றும் சூப்பர்வைசர் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் 108 ஆம்புலன்ஸ் மூலம் கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர்களுக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகிறார்கள்.
இச்சம்பவம் குறித்து தாந்தோன்றிமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், லாரிக்கு தீவைத்து விட்டு தப்பி ஓடிய மர்ம கும்பலை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
Related Tags :
Next Story