கரூர் மாவட்டத்தில் இடி-மின்னலுடன் பலத்த மழை

கரூர் மாவட்டத்தில் இடி-மின்னலுடன் பலத்த மழை பெய்தது.
கரூர்,
பலத்த மழை
கரூரில் கடந்த சில தினங்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. இதனால் பொதுமக்கள் மிகவும் அவதியடைந்தனர். கரூரில் நேற்று காலை முதல் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. இந்தநிலையில் மாலை 4.45 மணியளவில் திடீரென கருமேகங்கள் திரண்டு மழை பெய்ய ஆரம்பித்தது. தொடர்ந்து இடி, காற்றுடன் பலத்த மழை பெய்தது. இந்த மழையானது கரூர், தாந்தோன்றிமலை, பசுபதிபாளையம், வெங்கமேடு, காந்திகிராமம் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் இரவு 7.30 மணி வரை நீடித்தது. இதனால் பொதுமக்கள் சாலைகளில் குடைப்பிடித்தும், நனைந்து கொண்டும் சென்றனர்.
இந்த திடீர் மழையால் கரூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் குளிர்ச்சியான சூழல் நிலவியது. கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கத்தால் அவதியடைந்த பொதுமக்கள் இந்த மழையால் மகிழ்ச்சி அடைந்தனர்.
அரவக்குறிச்சி
அரவக்குறிச்சி, மலைக்கோவிலூர், பள்ளப்பட்டி, தடா கோவில், புங்கம்பாடி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் கடுமையாக இருந்தது. இதனால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மிகவும் அவதிப்பட்டனர். நேற்று மதியம் முதலே வானம் மேகமூட்டமாக காட்சியளித்தது. மாலை 5 மணியளவில் சாரல் மழை பெய்தது. மாலை 6 மணிக்கு திடீரென இடி மின்னலுடன் பலத்த மழை பெய்தது. ஒரு மணி நேரம் பெய்த மழையினால் அரவக்குறிச்சி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் வெப்பத்தின் தாக்கம் சற்று குறைந்தது. ஆடு, மாடுகளுக்கு தீவனமாக புற்கள் வளர இந்த மழை பயனுள்ளதாக இருக்கும் என்று இப்பகுதி விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
நொய்யல், வேலாயுதம்பாளையம்
நொய்யல் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான திருக்காடுதுறை, நத்தமேடு, தவிட்டுப்பாளையம், நஞ்சை புகழூர், பாலத்துறை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நேற்று மதியம் 2 மணியளவில் இடியுடன் கூடிய சாரல் மழை பெய்தது. அதேபோல் சில்லென்று காற்றும் வீசியதால் குளிர்ந்த சீதோஷ்ண நிலை ஏற்பட்டது. இதனால் விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
வேலாயுதம்பாளையம், கந்தம்பாளையம், கூலக்கவுண்டனூர், காகிதபுரம், புதுகுறுக்கு பாளையம், மூலிமங்கலம், மூர்த்திபாளையம், கடம்பங்குறிச்சி, மண்மங்கலம் ஆகிய பகுதிகளில் காலை முதலே வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. பிற்பகல் 3 மணியளவில் திடீரென்று பலத்த மழை பெய்தது. இந்த மழை விடாமல் ½ மணி நேரம் பெய்தது. தாழ்வான இடங்களில் மழைநீர் தேங்கியதால் வாகன ஓட்டிகள் அவதியடைந்தனர்.
Related Tags :
Next Story






