2 மகள்கள் இருப்பதை மறைத்து வாலிபரை ஏமாற்றி 2-வது திருமணம் செய்த பெண்
2 மகள்கள் இருப்பதை மறைத்து வாலிபரை ஏமாற்றி பெண் 2-வது திருமணம் செய்தார். வீட்டில் இருந்து ரூ.1 லட்சத்துடன் மாயமானவரை பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.
நெல்லை:
ஈரோடு மாவட்டம் கோபி செட்டிப்பாளையம் அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த 35 வயது வாலிபர், கோவையில் ‘பைப் வால்வு’ தயாரிக்கும் நிறுவனத்தில் ஊழியராக பணியாற்றி வருகிறார். இவருக்கு திருமணம் செய்ய தரகர்கள் மூலம் பெண் பார்த்து வந்தனர். இந்த விவரம் சில தரகர்கள் மூலம் நெல்லை பாளையங்கோட்டையை சேர்ந்த தரகர் வேலை செய்யும் பெண்ணுக்கு தெரியவந்தது. அவரது ஏற்பாட்டில் பாளையங்கோட்டையை சேர்ந்த 35 வயது பெண்ணை, அந்த வாலிபருக்கு திருமணம் செய்து வைப்பதாக பேசி முடித்தனர்.
இதையடுத்து அங்கிருந்து வாலிபர், அவரது உறவினர்கள் பாளையங்கோட்டை வந்து பெண்ணை பார்த்தனர். பின்னர் அந்த பெண்ணை கடந்த மாதம் ஈரோட்டுக்கு அழைத்து சென்றனர். அங்குள்ள கோவிலில் வைத்து அந்த பெண்ணை வாலிபர் திருமணம் செய்து கொண்டார். அங்கு திருமண ஏற்பாடு செய்த தரகரும் உதவிக்கு இருந்து வந்துள்ளார். ஈரோட்டில் வாலிபர் தனது புதுமனைவியுடன் குடும்பம் நடத்தி வந்தார்.
இந்த நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு வீட்டில் இருந்து புதுமணம் புரிந்த பெண்ணும், தரகரும் மாயமானார்கள். இதையடுத்து வாலிபர் மற்றும் உறவினர்கள், 2 பேரையும் பல்வேறு இடங்களில் தேடிப்பார்த்தனர். ஆனாலும் அவர்களை கண்டுபிடிக்க முடியவில்லை. மேலும் வீட்டில் இருந்த ரூ.1 லட்சத்தையும் காணவில்லை என்று கூறப்படுகிறது.
இதைத்தொடர்ந்து வாலிபர் மற்றும் அவரது உறவினர்கள் நேற்று முன்தினம் பஸ்சில் நெல்லை புதிய பஸ் நிலையத்துக்கு வந்தனர். அங்கிருந்து திருமணம் நடத்திக் கொடுத்த தரகரை தொடர்பு கொண்டு பேசினார்கள். அந்த சமயத்தில் புதுமண பெண்ணும், தரகரும் புதிய பஸ் நிலையத்துக்கு வந்தனர். அங்கு இருதரப்புக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. பின்னர் 2 பெண்களையும் பிடித்து புதிய பஸ் நிலைய புறக்காவல் நிலைய போலீசில் ஒப்படைத்தனர்.
போலீசார், இருதரப்பினரையும் பாளையங்கோட்டை குற்றப்பிரிவு போலீஸ் நிலையத்துக்கு அனுப்பி வைத்தனர். போலீசாரின் விசாரணையில் அந்த பெண்ணுக்கு ஏற்கனவே திருமணமாகி 2 மகள்கள் இருப்பதும், முதல் கணவரை பிரிந்து விட்டதும் தெரியவந்தது. தற்போது 2-வதாக ஈரோடு வாலிபரை ஏமாற்றி திருமணம் செய்திருப்பதும் தெரியவந்தது.
இதையடுத்து வாலிபர், அந்த பெண் தனக்கு ஏற்கனவே திருமணமாகி 2 மகள்கள் இருப்பதை மறைத்து தன்னை ஏமாற்றி விட்டதாகவும், தனது வீட்டில் இருந்து அவர் எடுத்து சென்ற ரூ.1 லட்சத்தை மீட்டுத்தருமாறும் போலீசாரிடம் புகார் அளித்தார். இதுதொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் நெல்லையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story