4 மணி நேரம் கொட்டித்தீர்த்த கனமழை


4 மணி நேரம் கொட்டித்தீர்த்த கனமழை
x
தினத்தந்தி 10 April 2022 2:53 AM IST (Updated: 10 April 2022 2:53 AM IST)
t-max-icont-min-icon

பேராவூரணியில் 4 மணி நேரம் கொட்டித்தீர்த்த கனமழையால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.

பேராவூரணி;
பேராவூரணியில் 4 மணி நேரம் கொட்டித்தீர்த்த கனமழையால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர். 
திடீர் மழை
தஞ்சை மாவட்டம் பேராவூரணி பகுதியில் நேற்று முன்தினம் இரவு 2 மணி நேரம் இடி- மின்னலுடன் மழை பெய்தது. நேற்று காலை வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. மதியம் 12 மணியிலிருந்து 2 மணி வரை மழை இடைவிடாமல் பெய்தது. இதனால் பேராவூரணி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பகுதிகளில் கோடை வெப்பம் தணிந்து குளிர்ந்த காலநிலை நிலவியது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். 
விவசாயிகள் கருத்து
கடந்த ஒரு மாதமாக பேராவூரணியில் வெயில் வாட்டி வதைத்த நிலையில் திடீரென பெய்த மழையால் குளிர்ச்சியான காலநிலை நிலவியது. இந்த மழை நெல், கடலை, எள், உளுந்து, மற்றும் தென்னை சாகுபடிக்கு மிகவும் பயனுள்ளதாக அமைந்தது என விவசாயிகள் கூறினர். தொடர்ந்து மழை பெய்தால் நிலத்தடிநீர்மட்டம் உயர்ந்து விவசாயத்துக்கு பெரும் உதவியாக இருக்கும் என விவசாயிகள் கூறினர். 
நீலகண்டபிள்ளையார் கோவில் 
பேராவூரணியில் நீலகண்ட பிள்ளையார் கோவில் சித்திரை திருவிழா கடந்த 7-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் ஒவ்வொரு மண்டகப்படி தாரர்களும் கோவிலுக்கு அருகில் அமைக்கப்பட்டுள்ள மேடையில் இசை கச்சேரி, பட்டி மன்றம் சொற்பொழிவு நடத்துவது வழக்கம். இந்தநிலையில் நேற்று பெய்த மழையால் தேர் சுற்றிவரும் பாதையில் மழைநீர் தேங்கி தெப்பம் போல் காட்சி அளித்தது. இதனால் மண்டகப்படிதாரர்களும் பக்தர்களும்  மிகுந்த அவதிக்குள்ளாகினர். இதைத்தொடர்ந்து உடனடியாக மழை நீர் தேங்கிய இடத்தை பேரூராட்சி தலைவர் சாந்தி சேகர், பேரூராட்சி செயல் அலுவலர் பழனிவேலு, ஆகியோர் பார்வையிட்டு தண்ணீரை வெளியேற்ற நடவடிக்கை எடுத்தனர். இதன்படி 5-க்கும் மேற்பட்ட டேங்கர் லாரிகள் வரவழைக்கப்பட்டு மழைநீரை வெளியேற்றினர். 2 மணி நேரத்தில் இந்த பணிகள் முடிந்தன. 


Next Story