வீடு கட்ட அனுமதி கோரியவரிடம் ரூ.8½ லட்சம் லஞ்சம் கேட்ட நகர வளர்ச்சி துறை அதிகாரி கைது


வீடு கட்ட அனுமதி கோரியவரிடம் ரூ.8½ லட்சம் லஞ்சம் கேட்ட நகர வளர்ச்சி துறை அதிகாரி கைது
x
தினத்தந்தி 10 April 2022 3:26 AM IST (Updated: 10 April 2022 3:26 AM IST)
t-max-icont-min-icon

வீடு கட்ட அனுமதி கோரியவரிடம் ரூ.8½ லட்சம் லஞ்சம் கேட்ட நகர வளர்ச்சித் துறை அதிகாரியை ஊழல் தடுப்பு படை போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.

சிக்கமகளூரு:

ரூ.8½ லட்சம் லஞ்சம்

  சிக்கமகளூரு மாவட்ட நகர வளர்ச்சி துறை துணை நிர்வாக அதிகாரியாக இருந்து வருபவர் சிவக்குமார். இந்த நிலையில் சிக்கமகளூரு டவுன் வீட்டுவசதி குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் கோபிநாத். அவர் தனக்கு சொந்தமான நிலத்தில் வீடு கட்ட முடிவு செய்தார். எனவே வீடு கட்டுவதற்கு அனுமதி கோரி நகர வளர்ச்சி துறை அதிகாரியிடம் மனு கொடுத்திருந்தார். ஆனால் அவரது மனுவை நிராகரித்தனர். அதுகுறித்து கோபிநாத் நகர வளர்ச்சி துறை அதிகாரி சிவக்குமாரிடம் கேட்டார்.

  அப்போது சிவக்குமார் வீடு கட்டுவதற்கு அனுமதி வழங்க வேண்டுமானால் தனக்கு ரூ.8½ லட்சம் லஞ்சம் கொடுக்க வேண்டும் என கூறி உள்ளார்.

ஊழல் தடுப்பு படையில் புகார்

  ஆனால் கோபிநாத்திற்கு லஞ்சம் கொடுக்க விருப்பம் இல்லை. உடனே அவர் மாவட்ட ஊழல் தடுப்பு படை போலீசில் புகார் அளித்தார். போலீசார் ரசாயன பொடி தடவிய ரூபாய் நோட்டுகள் அடங்கிய ரூ.2 லட்சத்தை கொடுத்து, அதை சிவக்குமாரிடம் வழங்குமாறு கோபிநாத்திடம் தெரிவித்தனர். மேலும் சில அறிவுரைகளையும் வழங்கி அனுப்பி வைத்தனர்.

  கோபிநாத்தும் சிவக்குமாரிடம் முதற்கட்டமாக ரூ.2 லட்சம் லஞ்சம் தருவதாக கூறி ஓட்டல் ஒன்றுக்கு வருமாறு கூறினார். சிவக்குமாரும் அந்த ஓட்டலுக்கு வந்து கோபிநாத்திடம் இருந்து ரூ.2 லட்சம் லஞ்சப்பணத்தை வாங்கினார்.

சிறையில் அடைப்பு

  அப்போது அங்கு மறைந்து இருந்த ஊழல் தடுப்பு படை போலீசார் சிவக்குமாரை கையும், களவுமாக பிடித்தனர். சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் சிவக்குமாரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அவரிடம் இருந்து ரூ.2 லட்சம் லஞ்சப்பணத்தை பறிமுதல் செய்தனர். பின்னர் அவரை போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

  இச்சம்பவத்தில் வேறு யாரும் சிவக்குமாருக்கு உடந்தையாக இருந்தார்களா? என்பது குறித்தும் ஊழல் தடுப்பு படை போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

Next Story