100 பணியாட்களுடன் கொடிகட்டி பறந்த பெண் சாராய வியாபாரி கைது


100 பணியாட்களுடன் கொடிகட்டி பறந்த பெண் சாராய வியாபாரி கைது
x
தினத்தந்தி 10 April 2022 7:15 PM IST (Updated: 10 April 2022 7:15 PM IST)
t-max-icont-min-icon

100 பணியாட்களுடன் திருப்பத்தூர் மாவட்டத்தையே கலக்கி வந்த பிரபல பெண் சாராய வியாபாரி, கணவருடன் கைது செய்யப்பட்டார்.

வாணியம்பாடி

100 பணியாட்களுடன் திருப்பத்தூர் மாவட்டத்தையே கலக்கி வந்த பிரபல பெண் சாராய வியாபாரி, கணவருடன் கைது செய்யப்பட்டார். அவரது கூட்டாளிகள் 5 பேரும் பிடிபட்டனர்.

கொடி கட்டி பறந்த சாராய விற்பனை

திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடியை சேர்ந்தவர் மகேஸ்வரி (வயது 45). சாராய வியாபாரியான இவர் தனது கும்பலுடன் வாணியம்பாடி நகரம், நேதாஜி நகர், இந்திரா நகர், லாலாஏரி உள்ளிட்ட பகுதிகளிலும், வாணியம்பாடியில் உள்ள 36 வார்டுகள் மற்றும் சுற்றுப்புற கிராமங்களிலும் சாராயம் காய்ச்சி விற்பனை செய்து வந்தார்.

சுமார் 25 ஆண்டுகளாக சாராய விற்பனையில் கொடிகட்டி பறந்த மகேஸ்வரி மற்றும் அவரது கும்பலின் அட்டகாசம் நாளுக்கு நாள் அதிகரித்து வந்ததால், இதனை எதிர்த்து பொதுமக்கள் கடந்த மாதம் 6-ந் தேதி முதல் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தின் உச்சக்கட்டமாக நேதாஜி நகர் பகுதியில் உள்ள புறக்காவல் நிலையத்தின் அருகே சாராய வியாபாரம் செய்து வந்த கொட்டகையை தீ வைத்து எரித்தனர். மேலும் அங்கிருந்த சாராய மூட்டைகளை கொண்டு வந்து ரோட்டில் கொட்டி சாலை மறியலில் ஈடுபட்டனர்.

போலீஸ் சுற்றி வளைப்பு

இதனையடுத்து வேலூர் சரக டி.ஐ.ஜி. ஆனிவிஜயா உத்தரவின்பேரில், திருப்பத்தூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலகிருஷ்ணன், வாணியம்பாடி துணை போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ் பாண்டியன், டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் நாகராஜன் தலைமையிலான போலீசார் 5 குழுக்களாகப் பிரிக்கப்பட்டு, நேதாஜி நகர் பகுதியில் வீடு, வீடாகவும், பிற இடங்களில் பல்வேறு வகையில் இந்த சாராய கும்பலை தீவிரமாக தேடி வந்தனர்.

இந்த கும்பலை சேர்ந்தவர்கள் ஏற்கனவே 21 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், நேற்று காலையில் சாராய கும்பல் வாணியம்பாடி பகுதியில் ஒரு இடத்தில் பதுங்கியிருப்பதாக கிடைத்த தகவலின் பேரில் அங்கு வாணியம்பாடி துணை போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ் பாண்டியன், இன்ஸ்பெக்டர் நாகராஜன் தலைமையிலான குழுவினர் விரைந்தனர். சம்பந்தப்பட்ட வீட்டை அவர்கள் சுற்றி வளைத்தனர்.

கணவருடன் கைது 

அங்கு பதுங்கியிருந்த பிரபல சாராய வியாபாரி மகேஸ்வரி,அவரது கணவர் சீனிவாசன் மற்றும் தேவேந்திரன், உஷா, சின்னராஜ், மோகன் மற்றும் இவர்கள் தங்குவதற்கு வீடு கொடுத்த பெண் நளினி உள்பட 7 பேரை போலீசார் கைது செய்தனர்.

திருப்பத்தூர் மாவட்டத்தையே கலக்கி வந்த பிரபல பெண் சாராய வியாபாரி கைது செய்யப்பட்டிருப்பது போலீசார் மத்தியில் நிம்மதியை ஏற்படுத்தி உள்ளது, எனினும் இந்த வழக்கை பொறுத்த வரையில் மகேஸ்வரி மீது 8 முறை குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது.  சுமார் 80-க்கும் மேற்பட்ட வழக்குகள் இருந்தும் தொடர்ந்து சாராய விற்பனையில் ஈடுபட்டு வந்தார். இவரிடம் 100-க்கும் மேற்பட்ட ஆட்கள் பணிபுரிவதால், இவரது சாராய வியாபாரம், போலி மது பாட்டில்கள் விற்பனை, கஞ்சா விற்பனையை முழுமையாக ஒழிக்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.
கைது செய்யப்பட்டவர்களிடம் வாணியம்பாடி தாலுகா போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

போலீசார் இடமாற்றப்படுவார்களா?

வாணியம்பாடி பகுதியில்  சாராய வியாபாரி மகேஸ்வரிக்கு ஆதரவாக தாலுகா போலீஸ் நிலையத்தில் பணிபுரியும் சில போலீசாரும், வாணியம்பாடி மதுவிலக்கு பிரிவு போலீசார் சிலரும் செயல்படுவதாகவும் குற்றச்சாட்டுகள் உள்ளன. எனவே அவர்களை ஒட்டுமொத்தமாக கூண்டோடு மாற்ற வேண்டும் என்றும் கடந்த சில தினங்களுக்கு முன்பு நடந்த போராட்டத்தின்போது பொதுமக்கள் ஆவேசத்துடன் கூறினர். எனவே அதுபோன்ற நடவடிக்கையை எடுக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு பொதுமக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.



Next Story