குளு, குளு சீசனை அனுபவிக்க கொடைக்கானலில் அலைமோதிய சுற்றுலா பயணிகள்


குளு, குளு சீசனை அனுபவிக்க  கொடைக்கானலில் அலைமோதிய சுற்றுலா பயணிகள்
x
தினத்தந்தி 10 April 2022 8:22 PM IST (Updated: 10 April 2022 8:22 PM IST)
t-max-icont-min-icon

குளு, குளு சீசனை அனுபவிக்க கொடைக்கானலில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அலைமோதியது.

கொடைக்கானல்:

 குளு, குளு சீசன் 
‘மலைகளின் இளவரசி’யான கொடைக்கானலில் தற்போது குளு, குளு சீசன் நிலவுகிறது. கடந்த 2 நாட்களாக கொடைக்கானலில் கொட்டித்தீர்த்த கனமழையினால் பல்வேறு அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. இதுமட்டுமின்றி திரும்பி பார்க்கும் திசையில் எல்லாம் பச்சைப்பசேல் என்று காட்சி அளிக்கிறது.
இதயத்தை வருடும் இதமான சீசனை அனுபவிப்பதற்காக தமிழகம் மற்றும் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் படையெடுத்த வண்ணம் உள்ளனர்.
இந்தநிலையில் வாரவிடுமுறையையொட்டி இன்று அதிகாலை முதலே ஏராளமான வாகனங்களில் சுற்றுலா பயணிகள் கொடைக்கானலில் குவிந்தனர். இதனால் நகரின் பல்வேறு இடங்களிலும், வனப்பகுதியிலும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. 

 பிரையண்ட் பூங்கா
கொடைக்கானலுக்கு வருகை தந்த சுற்றுலா பயணிகள் வனப்பகுதியில் உள்ள மோயர் பாயிண்ட், பைன் மரக்காடுகள், குணாகுகை, பில்லர்ராக், பசுமை பள்ளத்தாக்கு மற்றும் மன்னவனூரில் உள்ள சுற்றுச்சூழல் மையம் போன்ற பகுதிகளை சுற்றி பார்த்தனர். அங்கு அவர்கள் புகைப்படம் மற்றும் செல்பி எடுத்து மகிழ்ந்தனர். 
மேலும் நகரில் பல்வேறு பகுதிகளில் தவழ்ந்து வந்த மேக கூட்டங்களை அவர்கள் ஆர்வத்துடன் ரசித்தனர். நட்சத்திர ஏரியில் ஆனந்தமாய் படகுசவாரி செய்தனர். பிரையண்ட் பூங்கா, ரோஜா பூங்காவில் உள்ள புல்வெளிகளில் ஏராளமான சுற்றுலா பயணிகள் குடும்பத்துடன் அமர்ந்து பொழுதை போக்கினர். அத்துடன் அங்குள்ள பூக்களை கண்டு ரசித்தனர்.  
மழை மற்றும் மேகமூட்டம் காரணமாக பிற்பகல் முதல் நகரில் குளிர் நிலவியது. அதனை பொருட்படுத்தாமல் குளிருக்கு பாதுகாப்பான உடைகளை அணிந்தபடி சுற்றுலா பயணிகளும், பொதுமக்களும் நடமாடினர். சுற்றுலா பயணிகள் தொடர்ந்து வருகை தருவதால் சுற்றுலா தொழிலை நம்பியுள்ள பல்வேறு தரப்பினரும் மகிழ்ச்சி அடைந்தனர்.


Next Story