வடமாநில தொழிலாளர்கள் 4 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டனர்


வடமாநில தொழிலாளர்கள் 4 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டனர்
x
தினத்தந்தி 10 April 2022 9:52 PM IST (Updated: 10 April 2022 9:52 PM IST)
t-max-icont-min-icon

வடமாநில தொழிலாளர்கள் 4 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டனர்

திருப்பூர்:
திருப்பூரில் நகை அடகு கடை கொள்ளையில் ஈடுபட்ட வடமாநில தொழிலாளர்கள் 4 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டனர்.
 கொள்ளை
திருப்பூர் யூனியன் மில் ரோடு கே.பி.என்.காலனியில் ஜெயக்குமாரின் நகை அடகு கடையில் கடந்த மாதம் 4-ந் தேதி அதிகாலையில் புகுந்த ஆசாமிகள் 3½ கிலோ தங்க நகைகள், 28 கிலோ வெள்ளிப்பொருட்கள், ரூ.15 லட்சம் ஆகியவற்றை கொள்ளையடித்துவிட்டு தப்பியது.
திருப்பூர் வடக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்களை தேடி வந்தனர். இந்தநிலையில் கொள்ளையர்கள் ரெயிலில் தப்பியது தெரியவந்தது. மராட்டி மாநிலம் பல்லார்ஷா ரெயில் நிலையத்தில் வைத்து பீகார் மாநிலம் அராரியா மாவட்டத்தை சேர்ந்த மகதப் ஆலம் (வயது 37), முகமது பத்ரூல் (25), முகமது சுபான் (30), தில்காஷ் (29) ஆகிய 4 பேரை கைது செய்தனர். கொள்ளை நடந்த 36 மணி நேரத்துக்குள் கொள்ளையர்களை கைது செய்து அவர்களிடம் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட பொருட்கள் முழுவதையும் பறிமுதல் செய்தனர்.
 குண்டர் சட்டத்தில் அடைப்பு
இவர்கள் மிகப்பெரிய கொள்ளை குற்ற செயலில் ஈடுபட்டு பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் ஈடுபட்டதால் அவர்களை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க திருப்பூர் மாநகர போலீஸ் கமிஷனர் ஏ.ஜி.பாபு உத்தரவிட்டார்.
கோவை மத்திய சிறையில் உள்ள மகதப் ஆலம், முகமது பத்ரூல், முகமது சுபான், தில்காஷ் ஆகிய 4 பேரிடம் ஓர் ஆண்டு குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைப்பதற்கான உத்தரவு  வழங்கப்பட்டது. திருப்பூர் மாநகரில் கடந்த ஜனவரி மாதம் முதல் இதுவரை 25 பேர் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

Next Story