சுதந்திர திருநாள் அமுத பெருவிழா விழிப்புணர்வு சைக்கிள் பேரணி
கள்ளக்குறிச்சியில் நடைபெற்ற சுதந்திர திருநாள் அமுத பெருவிழா விழிப்புணர்வு சைக்கிள் பேரணியில் கலெக்டர் ஸ்ரீதர் கலந்து கொண்டார்.
கள்ளக்குறிச்சி,
கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் செய்தி மக்கள் தொடர்புத்துறை சார்பில் 75-வது சுதந்திர திருநாள் அமுத பெருவிழா கண்காட்சி நடைபெற்று வந்தது. நிறைவு நாளான நேற்று விழிப்புணர்வு சைக்கிள் பேரணி நடைபெற்றது.
பேரணியை கலெக்டர் ஸ்ரீதர் கொடியசைத்து தொடங்கி வைத்ததுடன் அவரும் சைக்கிளில் பேரணியாக சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தினார். மேலும் கலெக்டரின் மனைவி விஜிதா அன்னிமாலா ஸ்ரீதர், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வகுமார் மற்றும் அரசு அலுவலர்கள், பணியாளர்கள் பள்ளி மாணவ, மாணவிகள், ஆசிரியர்கள், தன்னார்வ தொண்டு அமைப்பினர் என சுமார் 300-க்கும் மேற்பட்டோரும் கலந்து கொண்டு பேரணியாக சென்றனர்.
கேடயம்
பேரணியானது மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் இருந்து தொடங்கி கச்சிராயப்பாளையம் காந்தி ரோடு, சேலம் மெயின் ரோடு வழியாக மாடூர் சுங்கச்சாவடி வரை சென்றடைந்து மீண்டும் கலெக்டர் அலுவலக வளாகத்தில் நிறைவடைந்தது. சுமார் 14 கிலோமீட்டர் தூரம் இந்த சைக்கிள் பேரணி நடைபெற்றது.
இதைத்தொடர்ந்து பேரணியில் கலந்து கொண்டவர்களுக்கு கலெக்டர் ஸ்ரீதர் பரிசு வழங்கி பாராட்டினார். மேலும் நிகழ்ச்சியை சிறப்பாக ஏற்பாடு செய்த செய்தி மக்கள் தொடர்புத்துறை, மாவட்ட இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கு பாராட்டு கேடயங்களையும் வழங்கினார்.
இதில் கள்ளக்குறிச்சி நகரமன்ற தலைவர் சுப்ராயலு, மாவட்ட வருவாய் அலுவலர் விஜய்பாபு, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) சுரேஷ், கள்ளக்குறிச்சி வருவாய் கோட்டாட்சியர் சரவணன், முதன்மைக் கல்வி அலுவலர் விஜயலட்சுமி, கள்ளக்குறிச்சி துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜலட்சுமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story