மளிகை வியாபாரி குடும்பத்துடன் சென்ற வேனில் 264 பவுன் நகை கொள்ளை
உளுந்தூர்பேட்டை அருகே மளிகை வியாபாரி குடும்பத்துடன் சென்ற வேனில் 264 பவுன் நகை கொள்ளையடிக்கப்பட்டது. இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
உளுந்தூர்பேட்டை,
சென்னை வில்லிவாக்கத்தை சேர்ந்தவர் தங்கபெருமாள்(வயது 60). இவர் அதே பகுதியில் மளிகைக்கடை நடத்தி வருகிறார். அவர் தனது மகன் பெரியசாமி, இவருடைய மனைவி சித்ரா, மற்றொரு மகன் ஆனந்தரமேஷ், இவருடைய மனைவி ஹேமலதா, தங்கபெருமாளின் தம்பி கோவிந்தசாமி, தங்கை ஆத்தியம்மாள் உள்பட 12 பேருடன் தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் பகுதியில் நடைபெற்ற திருவிழாவில் கலந்து கொள்வதற்காக நேற்று முன்தினம் இரவு ஒரு வேனில் புறப்பட்டார். வேனை சென்னையை சேர்ந்த பாண்டி(26) என்பவர் ஓட்டினார்.
264 பவுன் நகைகள் கொள்ளை
தங்கபெருமாள் குடும்பத்தினர் தங்களது உடைமைகளை பெட்டிகளில் வைத்து அதை வேனின் மேற்கூரையில் வைத்து தார்ப்பாயால் கட்டி இருந்தனர். மேலும் அந்த பெட்டிகளுக்குள் நகைகளும் வைத்திருந்தனர். இவர்களது வேன் நேற்று அதிகாலையில் கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள பாதூரில் வந்தது.
அப்போது டிரைவர் பாண்டி, டீ குடிப்பதற்காக தனியார் ஓட்டலில் நிறுத்தினார். அங்கு அனைவரும் இறங்கி டீ குடித்து விட்டு வேனில் ஏற முயன்றனர். அப்போது வேனின் மேற்கூரையில் கட்டப்பட்டிருந்த தார்ப்பாய் அவிழ்ந்திருந்தது. இதனால் சந்தேகமடைந்த தங்கபெருமாள் குடும்பத்தினர் வேனின் மேற்பகுதியில் ஏறி பார்த்தனர். அங்கு வைத்திருந்த 4 பெட்டிகளை காணவில்லை. அதில் 2 பெட்டிகளில் 264 பவுன் நகைகள் இருந்தது. இதனை மர்மநபர்கள் கொள்ளையடித்துச் சென்றிருக்கலாம் என்று தெரிந்தது.
போலீசார் விசாரணை
இதனால் அதிர்ச்சியடைந்த அவர்கள் இதுபற்றி திருநாவலூர் போலீசில் புகார் கொடுத்தனர். அதன்பேரில் போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். மேலும் இந்த வழக்கில் துப்பு துலக்க கள்ளக்குறிச்சி போலீஸ் சூப்பிரண்டு செல்வக்குமார் உத்தரவின்பேரில் இன்ஸ்பெக்டர் சீனிவாசன் தலைமையில் 6 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. அவர்கள் தங்கபெருமாள் குடும்பத்தினர், டிரைவர் பாண்டி ஆகியோரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். நகைகள் கொள்ளையடிக்கப்பட்டதா? அல்லது வரும் வழியில் பெட்டிகள் தவறி கீழே விழுந்ததா? குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
மேலும் வரும் வழியில் கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளையும் போலீசார் கைப்பற்றி ஆய்வு செய்து வருகின்றனர். இந்த சம்பவம் உளுந்தூர்பேட்டை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story