நீண்ட நாட்களாக வராமல் இருந்த 900 மாணவ, மாணவிகள் மீண்டும் பள்ளிக்கு வருகை-கலெக்டர் ஸ்ரேயாசிங் தகவல்
நாமக்கல் மாவட்டத்தில் பல்வேறு நடவடிக்கைகள் காரணமாக நீண்ட நாட்களாக வராமல் இருந்த 900 மாணவ, மாணவிகள் மீண்டும் பள்ளிக்கு வந்துள்ளதாக கலெக்டர் ஸ்ரேயாசிங் தெரிவித்து உள்ளார்.
நாமக்கல்:
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தொடர் நடவடிக்கைகள்
நாமக்கல் மாவட்டத்தில் அரசு பள்ளிகளில் 6-ம் வகுப்பு முதல் பிளஸ்-2 வரை 84 ஆயிரத்து 312 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். கொரோனா பெருந்தொற்று காரணத்தினால் கடந்த 2 ஆண்டுகளாக பள்ளிகளில் நேரடி வகுப்புகள் நடைபெறாமல் இருந்து வந்தது. தற்போது நேரடி வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. பள்ளிகளுக்கு மாணவ, மாணவிகள் முழுமையாக வருவதை உறுதி செய்ய பல்வேறு தொடர் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
மாவட்ட கலெக்டர், முதன்மை கல்வி அலுவலர், மாவட்ட கல்வி அலுவலர்கள், வட்டார கல்வி அலுவலர்கள் நேரடியாக பள்ளிகளில் அடிக்கடி ஆய்வு செய்து, மாணவ, மாணவிகளின் வருகை குறித்து தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்களிடம் கேட்டறிவதுடன், வகுப்பு ஆசிரியர்கள் சம்பந்தப்பட்ட மாணவ, மாணவிகளின் பெற்றோருக்கு போன் மூலமாக தகவல் தெரிவித்தும், நேரில் சென்று அழைத்தும் பள்ளிக்கு வரவழைக்கப்பட்டு வருகின்றனர்.
6 சிறுவர்கள் மீட்பு
மேலும் தொழிலாளர் நலத்துறையினர் மற்றும் தேசிய குழந்தை தொழிலாளர் திட்ட அலுவலர் இணைந்து தொழில் நிறுவனங்களில் மேற்கொண்ட தொடர் ஆய்வுகளின்போது பள்ளிபாளையம், குமாரபாளையம் பகுதிகளில் இயங்கி வந்த வாட்டர் சர்வீஸ் ஸ்டேசனிலிருந்து ஒரு சிறுவனும், பைக் பட்டறையில் 2 சிறுவர்களும், மளிகை கடையில் 2 சிறுவர்களும், வெல்டிங் பட்டறையில் ஒரு சிறுவனும் என மொத்தம் 6 பேர் மீட்கப்பட்டனர்.
மீட்கப்பட்ட சிறுவர்கள் கல்வி பயில உரிய ஏற்பாடுகள் செய்யப்பட்டு, அவர்கள் தற்போது கல்வி கற்று வருகின்றனர்.
மீண்டும் வருகை
மாவட்ட நிர்வாகம் மேற்கொண்ட பல்வேறு நடவடிக்கைகளின் காரணமாக நீண்ட நாட்களாக பள்ளிகளுக்கு வராமல் இருந்த 900 மாணவ, மாணவிகள் மீண்டும் பள்ளிக்கு வருகை தருவதுடன், தங்களது கல்வியினை ஆர்வத்துடன் தொடர்கின்றனர்.
நாமக்கல் மாவட்டத்தில் குழந்தை தொழிலாளர்கள் பணியாற்றுவது கண்டறியப்பட்டால் தேசிய குழந்தை தொழிலாளர் திட்ட அலுவலக எண் 04286 280056 மற்றும் சைல்டு லைன் எண் 1098-க்கு பொதுமக்கள் தகவல் தெரிவிக்க வேண்டும்.
இவ்வாறு அதில் அவர் கூறி உள்ளார்.
Related Tags :
Next Story