மறமடக்கியில் ஜல்லிக்கட்டு: சீறிப்பாய்ந்த காளைகள் முட்டியதில் 27 பேர் காயம்


மறமடக்கியில் ஜல்லிக்கட்டு: சீறிப்பாய்ந்த காளைகள் முட்டியதில் 27 பேர் காயம்
x
தினத்தந்தி 10 April 2022 11:10 PM IST (Updated: 10 April 2022 11:10 PM IST)
t-max-icont-min-icon

மறமடக்கியில் நடைபெற்ற ஜல்லிக்கட்டில் சீறிப்பாய்ந்த காளைகள் முட்டியதில் 27 பேர் காயமடைந்தனர்.

அறந்தாங்கி:
ஜல்லிக்கட்டு 
அறந்தாங்கி அருகே மறமடக்கி செல்வவினாயகர், பெருமாள் கோவில் பங்குனி திருவிழாவை முன்னிட்டு முதலாம் ஆண்டு ஜல்லிக்கட்டு நடைபெற்றது. முதலில் காளைகளுக்கும், மாடுபிடி வீரர்களுக்கும் மருத்துவ பரிசோதனை நடைபெற்றது.
ஜல்லிக்கட்டை அமைச்சர் மெய்யநாதன் தலைமையில், கலெக்டர் கவிதாராமு, அறந்தாங்கி கோட்டாட்சியர் சொர்ணராஜ், அறந்தாங்கி ஒன்றிய தலைவர் மகேஸ்வரி சண்முகநாதன் ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர். அதைத்தொடர்ந்து வாடிவாசலில் இருந்து அலங்கரிக்கப்பட்ட காளைகள் ஒவ்வொன்றாக அவிழ்த்து விடப்பட்டன.
645 காளைகள் 
இதில் 350 மாடுபிடி வீரர்கள் கலந்து கொண்டு சீறிப்பாய்ந்து வந்த காளைகளை போட்டிப்போட்டு அடக்கினர். சில காளைகள் களத்தில் நின்று தன்னை அடக்க வந்த வீரர்களை அருகில் நெருங்க விடாமல் மிரட்டின. அப்போது பொதுமக்கள் கைத்தட்டி ஆரவாரம் செய்தனர். சில காளைகள் வீரர்களை தூக்கி வீசி பந்தாடியது. இதில் திருச்சி, மதுரை, சிவகங்கை, கரூர், விராலிமலை, புதுக்கோட்டை, அன்னவாசல், அறந்தாங்கி உள்ளிட்ட இடங்களில் இருந்து வந்திருந்த 645 காளைகள் அவிழ்த்து விடப்பட்டன.
27 பேர் காயம்
காளைகள் முட்டியதில் 27 பேர் காயம் அடைந்தனர். அவர்களுக்கு அங்கிருந்த மருத்துவ குழுவினரால் சிகிச்சை அளிக்கப்பட்டது.  ஜல்லிக்கட்டில் காளைகளை அடக்கிய வீரர்களுக்கும், வீரர்களிடம் பிடிபடாத காளைகளின் உரிமையாளர்களுக்கும் தங்கம், வெள்ளி நாணயம், பீரோ, மிக்சி உள்ளிட்ட பரிசு பொருட்கள் வழங்கப்பட்டன. ஜல்லிக்கட்டில் சிறந்த மாடுபிடி வீரருக்கும், சிறந்த மாட்டின் உரிமையாளருக்கும் மோட்டார் சைக்கிள்கள் பரிசாக வழங்கப்பட்டது. 
ஜல்லிக்கட்டை திருச்சி, மதுரை, சிவகங்கை, கரூர், விராலிமலை, புதுக்கோட்டை, அன்னவாசல், அறந்தாங்கி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து திரளான பொதுமக்கள் கலந்து கொண்டு கண்டு களித்தனர். ஜல்லிக்கட்டுக்கான ஏற்பாடுகளை விழா குழுவினர் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.

Next Story