புவனகிரி பேரூராட்சியில் ரூ.91 லட்சம் கையாடல் கணினி ஆபரேட்டர் கைது
புவனகிரி பேரூராட்சியில் ரூ.91 லட்சம் கையாடல் செய்த கணினி ஆபரேட்டர் கைது செய்யப்பட்டார்.
புவனகிரி,
புவனகிரி அருகே உள்ள கீழமணக்குடி கிராமத்தை சேர்ந்தவர் வீரமுத்து மகன் வீரமணி (வயது 29). இவர் புவனகிரி பேரூராட்சி அலுவலகத்தில் தற்காலிக கணினி ஆபரேட்டராக கடந்த 2 ஆண்டுகளாக பணிபுரிந்து வருகிறார். பேரூராட்சி அலுவலகத்தில் வரவு, செலவு குறித்த தகவலை கணினியில் பதிவு செய்து வந்தார்.
இந்த நிலையில் புவனகிரி பேரூராட்சி அலுவலகத்தில் கடந்த மாதம் தணிக்கை(ஆடிட்டிங்) நடைபெற்றது. இதில் பேரூராட்சியின் வங்கி கணக்கில் இருந்து ரூ.90 லட்சத்து 92 ஆயிரம் குறைந்து இருப்பது தெரியவந்தது.
2 காசோலை திருட்டு
இதுகுறித்து பேரூராட்சி செயல் அலுவலர் அருள்குமார் வங்கிக்கு சென்று பேரூராட்சி கணக்கை சரிபார்த்தார். அப்போது, கணினி ஆபரேட்டர் வீரமணி பணத்தை கையாடல் செய்து இருப்பது தெரியவந்தது.
அதாவது, கடந்த 5.10.2021 அன்று பேரூராட்சி அலுவலகத்தில் அப்துல் சாதிக்பாஷா என்பவர் செயலாளராக பணியாற்றி வந்தார். அப்போது கணினி ஆபரேட்டராக இருந்த வீரமணி, செயல் அலுவலர் அப்துல்சாதிக் பாஷாவுக்கு தெரியாமல் பல்வேறு திட்டப்பணிகளுக்கான 2 காசோலைகளை திருடி, அதில் ஒன்றில் முதல் முறையாக ரூ.88 லட்சத்து 97 ஆயிரத்தையும், 2-வது காசோலையில் 1 லட்சத்து 95 ஆயிரம் ரூபாயையும் முறைகேடாக வங்கியில் இருந்து எடுத்து இருப்பது தெரியவந்தது.
கணினி ஆபரேட்டர் கைது
இதுகுறித்து பேரூராட்சி செயல் அலுவலர் அருள்குமார், புவனகிரி போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் இன்ஸ்பெக்டர் சரஸ்வதி வழக்குப்பதிவு செய்து வீரமணியை கைது செய்தார்.
பேரூராட்சியில் பணம் கையாடல் தொடர்பாக வீரமணி மட்டும் சம்பந்தப்பட்டுள்ளாரா? அல்லது அவருக்கு உடந்தையாக வேறு யாரும் உள்ளார்களா? என்று பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story