பலத்த மழையால் பஞ்சமாதேவி பகுதியில் வேரோடு சாய்ந்த மரங்கள்
கரூர் அருகே உள்ள பஞ்சமாதேவி பகுதியில் காற்றுடன் பெய்த பலத்த மழையால் மரங்கள் வேரோடு சாய்ந்தன. மின்கம்பங்களும் சரிந்து விழுந்தன.
கரூர்,
பலத்த மழை
கரூரில் கடந்த சில தினங்களாக வெயில் வாட்டி வதைத்தது. இந்தநிலையில் நேற்றுமுன்தினம் மாலை 5 மணியளவில் திடீரென இடி, மின்னல், காற்றுடன் பலத்த மழை பெய்தது. இந்த மழையானது கரூர், காந்திகிராமம், தாந்தோன்றிமலை, பசுபதிபாளையம், வாங்கல், நெரூர் உள்ளிட்ட அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இரவு வரை பெய்தது.
அப்போது பலத்த காற்றுடன் மழை பெய்ததால் கரூர் அருகே உள்ள பஞ்சமாதேவி பகுதியில் உள்ள சாலையின் ஓரத்தில் புளிய மரங்கள் வேரோடு சாய்ந்து சாலையின் நடுவில் விழுந்தன. மேலும் மின்கம்பங்களும் சரிந்து விழுந்தன.
வேரோடு சாய்ந்த மரங்கள்
இதில் சந்தானகாளிபாளையம் முதல் பஞ்சமாதேவி வரை பல்வேறு இடங்களில் 17 புளிய மரங்கள் வேரோடு சாய்ந்தன. இந்த மரங்கள் மின்கம்பிகள் மீதும் சாய்ந்ததால் பல இடங்களில் 5-க்கும் மேற்பட்ட மின்கம்பங்கள் சாய்ந்தும், ஒருசில இடங்களில் மின்கம்பங்கள் உடைந்தும் விழுந்தன. ஒரு கட்டிடத்தின் மீதும் புளிய மரம் விழுந்தது. மேலும் மின்கம்பிகள் சாலையில் ஓரத்தில் விழுந்து கிடந்தன. நேற்று முன்தினம் மாலை முதல் அப்பகுதியில் மின்நிறுத்தம் செய்யப்பட்டதால், எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை.
அகற்றும் பணி
இந்தநிலையில் காற்றுடன் கூடிய பலத்த மழையின் காரணமாக சாலையில் விழுந்த மரங்களால் கரூரில் இருந்து நெரூருக்கு செல்லும் சாலை பேரிகார்டு வைத்து அடைக்கப்பட்டன. இதனால் வாகனங்கள் வாங்கல் சாலையில் சென்று மின்னாம்பள்ளி வழியாக நெரூருக்கு சென்றன. இந்தநிலையில் நேற்று காலை சாலையில் விழுந்த மரங்களை அகற்றும் பணி துரிதமாக நடைபெற்றது.
நெடுஞ்சாலைத்துறை பணியாளர்கள் பொதுமக்கள் உதவியுடன் சாலைகளில் விழுந்த மரங்களை அகற்றியும், எந்திரம் மூலம் வெட்டியும் சாலையை ஒழுங்குப்படுத்தினர். மேலும் பொக்லைன் எந்திரம் மூலம் மரங்கள் அகற்றப்பட்டன. தொடர்ந்து மின்கம்பங்கள், மின்கம்பிகளை ஒழுங்குப்படுத்தும் பணியும் நடைபெற்று வருகிறது.
Related Tags :
Next Story