நகை தொழிலாளர் சங்க கூட்டம்
நெல்லை டவுனில் நகை தொழிலாளர் சங்க கூட்டம் நடந்தது.
நெல்லை;
தமிழ்நாடு நகை தொழிலாளர் மத்திய சங்கத்தின் மாநில பொது குழு கூட்டம் நெல்லையில் நேற்று நடைபெற்றது. மாநில அவைத் தலைவர் வள்ளிமயில் வேம்பு தலைமை தாங்கினார். இணை பொதுச்செயலாளர் நெல்லை குமார் வரவேற்றார். மாநில பொதுச்செயலாளர் திருச்சி வேலு தொடங்கி வைத்து பேசினார். பொருளாளர் சங்கரன் வரவு செலவுகளை தாக்கல் செய்தார். நிர்வாகிகள் முனிராஜ், முருக முரளிதரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில், பாரம்பரிய பொற்கொல்லர்களை கோவில் அறங்காவலராக நியமிக்க வேண்டும். தங்க கட்டுப்பாடு சட்டம் மூலம் பாதிக்கப்பட்ட பொற்கொல்லர்களுக்கு அரசு வேலைவாய்ப்பில் தமிழக அரசு முன்பு வழங்கிய 4 சதவீத இட ஒதுக்கீட்டை மீண்டும் வழங்க வேண்டும். கூட்டுறவு மற்றும் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் வேலை செய்துவரும் நகை மதிப்பீட்டாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். தமிழ்நாடு பொற்கொல்லர் நலவாரிய செயல்பாட்டை விரைவுபடுத்த வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முடிவில் நெல்லை நகர பொற்கொல்லர் சங்க துணை செயலாளர் அசோக்ராஜ் நன்றி கூறினார்.
Related Tags :
Next Story