பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகளுக்கான பேச்சு போட்டி
அம்பேத்கர் பிறந்த நாளையொட்டி பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகளுக்கான பேச்சு போட்டி வருகிற 19-ந் தேதி நடைபெற உள்ளது.
அரியலூர்
பேச்சு போட்டி
தமிழக அரசு தமிழ் வளர்ச்சி துறையின் சார்பில் 2021-22-ம் ஆண்டிற்கான மானிய கோரிக்கையில், நாட்டிற்காக பாடுபட்ட தலைவர்களான மகாத்மா காந்தி, ஜவகர்லால் நேரு, சட்டமேதை அம்பேத்கர், தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா ஆகியோரின் பிறந்த நாளன்று மாவட்ட அளவில் பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகளுக்கு தனித்தனியே பேச்சு போட்டிகள் நடத்தி பரிசு, பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட வேண்டும் என்று அறிவித்துள்ளது. அதன்படி அம்பேத்கர் பிறந்த நாளையொட்டி அரியலூர் மாவட்டத்தில் வருகிற 19-ந் தேதி காலை 10 மணியளவில் அரியலூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகளுக்கு தனித்தனியே பேச்சு போட்டிகள் நடத்தப்படவுள்ளன. இப்போட்டியில் பங்குபெற்று வெற்றி பெறும் பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகளுக்கு மாவட்ட அளவில் முதல் பரிசாக ரூ.5 ஆயிரமும், 2-ம் பரிசாக ரூ.3 ஆயிரமும், 3-ம் பரிசாக ரூ.2 ஆயிரமும் வழங்கப்படவுள்ளது.
சிறப்பு பரிசு
இவை அல்லாமல் பள்ளி மாணவர்களுக்கென நடத்தப்பெறும் பேச்சு போட்டியில் பங்கேற்ற மாணவ-மாணவிகளில், அரசு பள்ளி மாணவ-மாணவிகளில் 2 பேரை தனியாக தேர்வு செய்து, ஒவ்வொருவருக்கும் சிறப்பு பரிசு தொகையாக தலா ரூ.2 ஆயிரம் வழங்கப்படவுள்ளது. இந்த தகவலை அரியலூர் மாவட்ட கலெக்டர் ரமணசரஸ்வதி வெளியிட்டுள்ள ஒரு செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.
இதேபோல் பெரம்பலூர் மாவட்டத்தில் அம்பேத்கர் பிறந்தநாளையொட்டி பேச்சு போட்டி நடைபெறும் இடம், நாள், நேரம், விதிமுறைகள் குறித்து பள்ளிகளுக்கு முதன்மை கல்வி அலுவலர், கல்லூரிகளுக்கு கல்லூரிக் கல்வி இணை இயக்குனர் வாயிலாகவும் சுற்றறிக்கை அனுப்பி தெரிவிக்கப்படும் என்று கலெக்டர் ஸ்ரீவெங்கடபிரியா வெளியிட்டுள்ள ஒரு செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.
Related Tags :
Next Story