2 மாதங்களில் ஒரு லட்சம் பேருக்கு வேலை வழங்கப்படும்


2 மாதங்களில் ஒரு லட்சம் பேருக்கு வேலை வழங்கப்படும்
x
தினத்தந்தி 11 April 2022 1:12 AM IST (Updated: 11 April 2022 1:12 AM IST)
t-max-icont-min-icon

2 மாதங்களில் ஒரு லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படும் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறினார்.

திருவிடைமருதூர்:
2 மாதங்களில் ஒரு லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படும் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறினார். 
வேலைவாய்ப்பு முகாம் 
கும்பகோணம் அருகே உள்ள திருமங்கலக்குடி தனியார் பொறியியல் கல்லூரியில்  நேற்று வேலைவாய்ப்பு முகாம் நடந்தது. முகாமில் தேர்வு பெற்ற நபர்களுக்கு பணி ஆணைகளை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வழங்கினார். 
பின்னர் அவர் பேட்டி அளித்தார். அதில் கூறியிருப்பதாவது:-
ஆட்சி பொறுப்பேற்றதும் இதுவரை 68 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அடுத்த 2 மாதங்களில் ஒரு லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படும். 
மேலும் 6 மாதம் நீட்டிப்பு 
கடந்த இரண்டு ஆண்டுகளாக மாணவ-மாணவிகள் பள்ளி செல்லாமல் வீட்டிலேயே இருந்ததால் அவர்களது பொது அறிவுத்திறன், கல்வி கற்கும் திறன் ஆகியவற்றை உயர்த்துவதற்காக இல்லம் தேடி கல்வி திட்டம் மேலும் ஆறு மாத காலத்திற்கு நீட்டிக்கபட்டுள்ளது.
10,11,12 ஆகிய வகுப்புகளுக்கு 9 யூனிட்களுக்கு பதில் 6 யூனிட்களுக்கான தேர்வுகள் நிச்சயம் நடைபெறும். பள்ளிகள் செயல்படும் நேரத்தை மாற்றம் செய்யும் நோக்கம் இல்லை. பள்ளிக்கல்வி துறையின் மானியக் கோரிக்கையின் போது பல அறிவிப்புகள் இருக்கும். 
இவ்வாறு அவர் கூறினார். 
முகாமில் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் கணேசன், அரசு கொறடா கோவி.செழியன், செ.ராமலிங்கம் எம்.பி, அன்பழகன் எம்.எல்.ஏ., மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், பெற்றோர் ஆசிரியர் கழக துணைத்தலைவர்  கல்யாணசுந்தரம், மாவட்ட காங்கிரஸ் தலைவர் டி.ஆர்.லோகநாதன், கும்பகோணம் மாநகராட்சி மேயர் சரவணன், துணைமேயர் சு.ப.தமிழழகன், மண்டல குழு தலைவர் ரா. அசோக்குமார், மாவட்ட கவுன்சிலர்கள் ஜி. கே. எம். ராஜா, எஸ். சரவணன் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

Next Story