ஜல்லிக்கட்டு போட்டியில் தடுப்பு வேலிகளை உடைத்து ரகளை; கல்வீச்சு-போலீஸ் தடியடி


ஜல்லிக்கட்டு போட்டியில் தடுப்பு வேலிகளை உடைத்து ரகளை; கல்வீச்சு-போலீஸ் தடியடி
x
தினத்தந்தி 11 April 2022 1:18 AM IST (Updated: 11 April 2022 1:18 AM IST)
t-max-icont-min-icon

திருமங்கலம் அருகே தடுப்பு வேலிகளை உடைத்து காளைகள் அவிழ்த்து விடப்பட்டதால் ஜல்லிக்கட்டு போட்டி பாதியில் நிறுத்தப்பட்டது. இதையடுத்து ஏற்பட்ட ரகளையால் போலீசார் தடியடி நடத்தினர்.

திருமங்கலம், 

திருமங்கலம் அருகே தடுப்பு வேலிகளை உடைத்து காளைகள் அவிழ்த்து விடப்பட்டதால் ஜல்லிக்கட்டு போட்டி பாதியில் நிறுத்தப்பட்டது. இதையடுத்து ஏற்பட்ட ரகளையால் போலீசார் தடியடி நடத்தினர்.

ஜல்லிக்கட்டு

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள கரடிக்கல் கிராமத்தில் சுந்தரராஜ பெருமாள் கோவில் திருவிழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டி நேற்று நடந்தது. இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் 600 காளைகளும், 450-க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்களும் பங்கேற்க அனுமதி அளிக்கப்பட்டு இருந்தது. ஜல்லிக்கட்டு போட்டி நேற்று காலை 8.30 மணிக்கு தொடங்கியது. திருமங்கலம் கோட்டாட்சியர் அனிதா, தாசில்தார் ஆனந்தகிருஷ்ணன், தமிழ்நாடு ஜல்லிக்கட்டு மாநில பேரவை தலைவர் ராஜசேகரன் ஆகியோர் ஜல்லிக்கட்டை தொடங்கி வைத்தனர். மொத்த வீரர்களை 8 சுற்றுகளாக பிரித்து ஒவ்வொரு சுற்றிலும் 50 முதல் 70 வீரர்கள் வரை கலந்து கொள்ள அனுமதிக்கப்பட்டனர்.

சீறி பாய்ந்த காளைகள்

முதல் சுற்றில் 70-க்கும் மேற்பட்ட வீரர்கள் கலந்து கொண்டனர். முதலில் கோவில் மாடுகள் அவிழ்த்து விடப்பட்டது. அனைத்து வீரர்களும் கோவில் மாட்டுக்கு மரியாதை செலுத்தினர். அதன் பின்னர் காளைகள் ஒன்றன்பின் ஒன்றாக அவிழ்த்து விடப்பட்டன. வாடிவாசலில் இருந்து சீறி வந்த காளைகளை மாடுபிடி வீரர்கள் மடக்கி பிடித்தனர். சில காளைகள் வீரர்களிடம் பிடிபடாமல் வேகமாக பாய்ந்து சென்றன. வெற்றி பெற்ற வீரர்களுக்கும், மாடுகளின் உரிமையாளர்களுக்கும் மேடையில் இருந்தபடி விழா கமிட்டியாளர்கள் பரிசுகளை வழங்கிய வண்ணம் இருந்தனர். மதியம் 1.30 மணி வரை 400 மாடுகள் அவிழ்த்து விடப்பட்டு இருந்தன. 300 வீரர்கள் பங்கேற்று இருந்தனர்.

தடுப்பு வேலி உடைப்பு

இந்தநிலையில் வாடிவாசலுக்குச் செல்லும் தடுப்பு வேலிகள் உடைக்கப்பட்டு வெளியே இருந்து மற்ற காளைகளை உள்ளே கொண்டுவர அதன் உரிமையாளர்கள் முயற்சித்தனர். இதனால் உடைக்கப்பட்ட தடுப்பு வேலி வழியாக சுமார் 30-க்கும் மேற்பட்ட காளைகள் மைதானத்துக்குள் பாய்ந்து ஓடின. உடைந்த வேலி வழியாக சிலர் புகுந்தனர். இதை தடுக்க முயன்ற போலீசாருக்கும், காளைகளின் உரிமையாளர்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் ஜல்லிக்கட்டு போட்டி நிறுத்தப்பட்டது. 
பின்னர் அதிகாரிகள், விழா கமிட்டியினர் இடையே பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு சுமார் அரைமணி நேரம் தாமதமாக மதியம் 2 மணிக்கு ஜல்லிக்கட்டு போட்டிகள் மீண்டும் தொடங்கின. அப்போது காளை உரிமையாளர்களிடம் டோக்கன்களை சோதனை செய்தபோது போலி டோக்கன்கள் இருப்பது தெரியவந்தது. இதை பார்த்து விழா கமிட்டியினர் அதிர்ச்சி அடைந்தனர். 

தள்ளுமுள்ளு

இதனால் அந்த காளைகளுக்கு போட்டியில் பங்கேற்க அனுமதி வழங்கப்படவில்லை. இதனால் அவர்கள் விழா கமிட்டியினருடன் தகராறில் ஈடுபட்டனர். சிலர் டோக்கனுக்கு உரிய நகல்கள் எடுத்துக் கொண்டு வரவில்லை என கூறி பிறவாடி வழியாக உள்ளே புகுந்தனர். அப்போது காளை உரிமையாளர்கள் மற்றும் போலீசாருக்கும் இடையே மீண்டும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. 
இதனால் மீண்டும் 2.30 மணிக்கு ஜல்லிக்கட்டை நிறுத்துவதாக கோட்டாட்சியர் அனிதா அறிவித்தார். அப்போது ஏராளமான மாடுகள் அவிழ்த்து விடப்படாமல் இருந்தன. 
மாடுகளின் உரிமையாளர்கள் தங்கள் மாடுகளை போட்டியில் பங்கேற்க அனுமதிக்க கோரினர். ஆனால் அனுமதி மறுக்கப்பட்டது. இதனால் ஆத்திரம் அடைந்த மாட்டின் உரிமையாளர்கள் பிறவாடி வழியாக மாட்டை அவிழ்த்து விட்டனர். இந்த மாடுகள் பார்வையாளர்கள் கூட்டத்தில் புகுந்ததால் அவர்கள் நாலாபுறமும் சிதறி ஓடினர். இதில் காளைகள் முட்டியதில் முதியவர் ஒருவர் படுகாயம் அடைந்தார்.

கல்வீச்சு-தடியடி

மேலும் வெற்றி பெற்ற வீரர்கள் மற்றும் மாடுகளுக்கு பரிசு வழங்கவில்லை என கூறி சிலர் தகராறில் ஈடுபட்டனர். அப்போது, சிலர் மேடையை நோக்கி கற்களை வீசினர். இதில் ஒருவர் படுகாயம் அடைந்தார். மேடையை நோக்கி கற்கள் வீசப்பட்டதால் அதில் இருந்து தப்பிக்க முயன்ற போது திருமங்கலம் தாசில்தார் அனந்தகிருஷ்ணன் நிலை தடுமாறி கீழே விழுந்தார். 
இதை தொடர்ந்து போலீசார் லேசான தடியடி நடத்தி கல்வீச்சில் ஈடுபட்டவர்களை கலைத்தனர். இதில் பலர் காயம் அடைந்ததாக தெரிகிறது. இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. அதன்பிறகு ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்தப்படவில்லை.

Next Story