குருத்தோலை திருநாள்: ஈரோடு புனித அமல அன்னை ஆலயத்தில் கிறிஸ்தவர்கள் ஊர்வலம்
குருத்தோலை திருநாளையொட்டி ஈரோடு புனித அமல அன்னை ஆலயத்தில் கிறிஸ்தவர்கள் குருத்தோலைகள் ஏந்தி ஊர்வலமாக சென்றனர்.
ஈரோடு
குருத்தோலை திருநாளையொட்டி ஈரோடு புனித அமல அன்னை ஆலயத்தில் கிறிஸ்தவர்கள் குருத்தோலைகள் ஏந்தி ஊர்வலமாக சென்றனர்.
தவக்காலம்
புனித வெள்ளியை முன்னிட்டு கிறிஸ்தவர்கள் 40 நாட்கள் தவக்காலத்தை கடைபிடித்து வருகிறார்கள். சாம்பல் புதன் முதல் இந்த தவக்கால வழிபாடுகள் அனைத்து கிறிஸ்தவ தேவாலயங்களிலும் நடந்து வருகின்றன.
வருகிற 15- ந் தேதி புனித வெள்ளி கடைபிடிக்கப்படுகிறது. இயேசு கிறிஸ்து சிலுவை சுமந்து சென்று, தன்னை மரணத்துக்கு ஒப்புக்கொடுத்த இந்த நாள் கிறிஸ்தவர்களால் துக்க நாளாக பெரிய வெள்ளியாக கடைபிடிக்கப்படுகிறது.
இயேசு கிறிஸ்து சிலுவை சாவுக்கு தன்னை ஒப்புக்கொடுக்கும் முன்பு ஜெருசலேம் நகருக்கு வந்தார். அவர் அப்படி நகருக்குள் நுழையும் போது அவரை பின்பற்றிய பலரும் அவரை அடையாளம் கண்டுகொண்டு இயேசுவை வரவேற்றனர்.
குருத்தோலை ஞாயிறு
தாவீது ராஜாவின் வழித்தோன்றலாக, ஜெருசலேம் நகரை தலைமையாக கொண்டு இஸ்ரேல் மக்களை ஆட்சி செய்யப்போகும் ராஜாவாக இயேசுவை மக்கள் கருதினார்கள். எனவே அவர்கள் இளம் கழுதைக்குட்டி ஒன்றின் மீது அவரை உட்கார வைத்து, அவர் சென்ற வழிகளில் தங்கள் மேலாடைகளை விரித்து ஒலிவ மர கிளைகளை வெட்டி அதன் ஓலைகளை கையில் ஏந்தி தாவீதின் மகனுக்கு ஓசான்னா.. என்று வெற்றி ஆர்ப்பரிப்பு பாடல் பாடி ஊர்வலமாக சென்றனர். இந்த நிகழ்வை நினைவு கூறும் வகையில் ஆண்டுதோறும் புனித வெள்ளியின் முந்தைய ஞாயிறு குருத்தோலை ஞாயிறாக, குருத்தோலை திருநாளாக கடைபிடிக்கப்படுகிறது. அதன்படி நேற்று அனைத்து கிறிஸ்தவ தேவாலங்களிலும் குருத்தோலை திருநாள் சிறப்பு வழிபாடு நடந்தது. ஈரோடு புனித அமல அன்னை ஆலயத்தில் ஆலய பங்குத்தந்தையும் ஈரோடு மறை வட்ட முதன்மை குருவுமான ஜான் சேவியர் தலைமையில் ஊர்வலம் நடந்தது. நடு வீதியில் உள்ள புனித செபஸ்தியார் சிற்றாலயத்தில் கிறிஸ்தவ மக்கள் ஒன்று கூடி அங்கிருந்து குருத்தோலைகளை கையில் ஏந்தி ஊர்வலமாக வந்தனர். முக்கிய வீதிகள் வழியாக வந்த ஊர்வலம் ஸ்டேட் வங்கி ரோட்டில் உள்ள புனித அமல அன்னை ஆலயத்தை அடைந்தது. ஊர்வலத்தில் கலந்து கொண்டவர்கள் ஓசான்னா பாடல் பாடியபடியும், பிராத்தனைகள் ஜெபித்தபடியும் ஆலயத்தை அடைந்தனர். தொடர்ந்து ஆலயத்தில் சிறப்பு திருப்பலி நடந்தது. இந்த வழிபாட்டு நிகழ்வுகளில் உதவி பங்குத்தந்தை ராயப்பதாஸ், அருட்தந்தை மைக்கேல் உள்பட ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.
ஈஸ்டர் பண்டிகை
புனித வெள்ளியை முன்னிட்டு வருகிற வியாழக்கிழமை மாலை பாதம் கழுவும் நிகழ்ச்சி, நற்கருணை இடம் மாற்றும் நிகழ்ச்சி ஆகியவை நடைபெறும். தொடர்ந்து நள்ளிரவு வரை தொடர் நற்கருணை ஆராதனை வழிபாடு நடைபெறும்.
வருகிற 15-ந் தேதி (வெள்ளிக்கிழமை) காலை முதல் நற்கருணை மவுன வழிபாடு நடக்கிறது. பகல் 11 மணிக்கு இயேசுவின் சிலுவைப்பாடுகளை நினைவு கூறும் சிலுவைப்பாதை வழிபாடு நடைபெறும். பிற்பகல் 3 மணிக்கு இறை இரக்க மன்றாட்டு நிகழ்வு நடக்கிறது. மாலையில் இயேசுவின் மரணத்தை நினைவுகூறும் வழிபாடு மற்றும் சிலுவை முத்தம் நிகழ்வுடன் புனித வெள்ளி வழிபாடுகள் நிறைவடைகின்றன.
17-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) இயேசு கிறிஸ்துவின் உயிர்ப்பை கொண்டாடும் ஈஸ்டர் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு 16-ந் தேதி (சனிக்கிழமை) இரவு 10 மணி முதல் வழிபாடுகள் தொடங்குகின்றன. பாஸ்கா விழா, ஒளி வழிபாடு, வார்த்தை வழிபாடு ஆகியவற்றை தொடர்ந்து நள்ளிரவில், இயேசு கிறிஸ்துவின் உயிர்ப்பு பெருவிழா (ஈஸ்டர் பண்டிகை) சிறப்பு திருப்பலி நடக்கிறது.
ஊர்வலம்
இதுபோல் ஈரோட்டில் ரெயில்வே காலனி திரு இருதய ஆண்டவர் ஆலயம், சி.எஸ்.ஐ. பிரப் நினைவு ஆலயம் உள்பட அனைத்து கிறிஸ்தவ ஆலயங்களிலும் தவக்கால வழிபாடுகள் நடக்கின்றன.
சி.எஸ்.ஐ. பிரப் நினைவு ஆலயத்தில் கிறிஸ்தவர்கள் குருத்தோலைகள் ஏந்தி முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலம் சென்றனர். இதில் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story