வீட்டில் உணவருந்தாமல் முடங்கி கிடந்த 2 பெண்கள்


வீட்டில் உணவருந்தாமல் முடங்கி கிடந்த 2 பெண்கள்
x
தினத்தந்தி 11 April 2022 5:02 AM IST (Updated: 11 April 2022 5:02 AM IST)
t-max-icont-min-icon

வீட்டில் உணவருந்தாமல் 2 பெண்கள் முடங்கி கிடந்தனர்.

மணப்பாறை:

சாப்பிடாமல் படுத்திருந்தனர்
திருச்சி மாவட்டம், மணப்பாறை பகுதியை சேர்ந்த 55 வயது பெண், திருமணமாகாமல் தனியார் வசித்து வந்தார். இந்நிலையில் அவரது அக்காளான ஓய்வு பெற்ற ஆசிரியை கடந்த சில மாதங்களுக்கு முன்பு இறந்துவிட்டார். இதையடுத்து அவர், தனது அக்காள் மகளான 30 வயது பெண்ணுடன் அவரது வீட்டில் வசித்து வருகிறார். அந்த பெண் பி.எஸ்சி. பிட் பட்டதாரி ஆவார்.
இந்நிலையில் அவர்கள் இருவரும், அந்த வீட்டில் பேய் இருப்பதாகவும், அந்த பெண்ணின் தாய் பேயாக வந்துள்ளதாகவும், பில்லி சூனியம் வைத்துள்ளதாகவும் கூறி வீட்டில் இருந்த பொருட்கள் பலவற்றையும் எடுத்து வெளியில் ஒரு பகுதியில் வீசி விட்டதாக கூறப்படுகிறது. மேலும் அவர்கள் வீட்டிற்குள் வசிக்காமல், வீட்டிற்கு வெளியே ஒரு தாழ்வான பகுதியில் தங்கி இருந்தனர். கடந்த சில நாட்களாக அவர்கள் சாப்பிடாமல் படுத்தே இருந்துள்ளனர். மேலும் வீட்டிற்குள் யாரையும் அனுமதிப்பதில்லை என்பதால் அக்கம், பக்கத்தினருக்கு சந்தேகம் ஏற்பட்டது.
உடல்நலம் பாதிப்பு
இந்நிலையில் அவர்கள் இதுபற்றிய தகவலை போலீசாருக்கு தெரிவித்தனர். அதன்பேரில் மணப்பாறை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அந்த வீட்டிற்குள் நுழைந்தபோது, ஆங்காங்கே மஞ்சள் தடவிய தேங்காய், எலுமிச்சம் பழம் உள்ளிட்டவைகளும் இருந்தன. வீட்டின் பின்பகுதியில் உள்ள சிறிய இடத்தில் அவர்கள் படுத்தபடி இருந்தனர். அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியபோது தங்களுக்கு யாரும் தேவை இல்லை என்று அனைவரையும் அங்கிருந்து செல்லுமாறு கூறினர்.
இருப்பினும் இருவரும் உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்ததால், அவர்களை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்க முயன்றபோது இருவரும் வரமறுத்தனர். மேலும் இன்னும் 2 நாள் கழித்து வருவதாகவும் தெரிவித்தனர்.
மருத்துவமனையில் அனுமதி
இதையடுத்து அவர்களது உறவினர் மூலம் பேச்சுவார்த்தை நடத்திய போலீசார், நீண்ட நேர போராட்டத்திற்கு பின்னர் ஆம்புலன்ஸ் மருத்துவ உதவியாளர் மூலம் இருவரையும் மீட்டு மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி  வைத்தனர். இருவரும் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். பெற்ற தாயே பேயாக வந்துள்ளதாக கூறி பட்டதாரி பெண், தனது சித்தியுடன் நீண்ட நாட்களாக உணவருந்தாமல் இருந்த செயல் அனைவரையும் வேதனைக்கு ஆளாகியுள்ளது. இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Related Tags :
Next Story