தூத்துக்குடி கலெக்டர் அலுவலகம் முன்பு ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பினர் திடீர் தர்ணா
தூத்துக்குடி கலெக்டர் அலுவலகம் முன்பு ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பினர் திடீரென்று தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். போலீசார் குவிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
தூத்துக்குடி:
தூத்துக்குடி கலெக்டர் அலுவலகம் முன் ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பினர் திடீரென்று தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். போலீசார் குவிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
தர்ணா போராட்டம்
ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் வக்கீல் அரிராகவன் தலைமையில், அந்த கூட்டமைப்பினர் ஏராளமானோர் நேற்று தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு ஊர்வலமாக வந்தனர்.
அவர்களை கலெக்டர் அலுவலகம் முன் போலீசார் தடுத்து நிறுத்தினர். பின்னர் கூட்டமைப்பினர் திடீரென்று தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு கோபி, துணை சூப்பிரண்டுகள் சம்பத், கணேஷ் மற்றும் போலீசார், தர்ணாவில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். முக்கிய நிர்வாகிகள் மட்டுமே கலெக்டரை சந்தித்து மனு கொடுக்குமாறு அறிவுறுத்தினர். ஆனால், போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அதை ஏற்க மறுத்து, அனைவரையும் உள்ளே செல்ல அனுமதிக்க வேண்டும். இல்லையெனில் கலெக்டர் இங்கு வந்து பேச வேண்டும் என்று வலியுறுத்தினர்.
அகற்ற வேண்டும்
இந்த சம்பவத்தை தொடர்ந்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தினார். தொடர்ந்து அவர்களை, கலெக்டரிடம் மனு கொடுப்பதற்காக அழைத்து சென்றார்.
பின்னர் கலெக்டர் செந்தில்ராஜிடம், ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பினர் மனு கொடுத்தனர். அந்த மனுவில் கூறிஇருப்பதாவது:-
தூத்துக்குடியில் மக்களை பிளவுபடுத்தும் நடவடிக்கைகளில் ஸ்டெர்லைட் நிறுவனம் ஈடுபட்டு உள்ளது. இதனால் மக்களிடையே மோதல் போக்கு ஏற்படும் நிலை உருவாகி உள்ளது.
எனவே, தமிழக அரசும், மாவட்ட நிர்வாகமும் ஸ்டெர்லைட் ஆலையை சிப்காட் வளாகத்தில் இருந்து அகற்ற வேண்டும். மேலும், மூடப்பட்டு உள்ள ஆலைக்குள் ஸ்டெர்லைட் அலுவலர்கள் சென்று வருவதை தடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
ஆர்ப்பாட்டம்
இதேபோன்று தூத்துக்குடி தெற்கு மாவட்ட தமிழக வாழ்வுரிமை கட்சி செயலாளர் மாரிசெல்வம் தலைமையில் கட்சியினர் கலெக்டர் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
பின்னர் அவர்கள், கலெக்டரிடம் கொடுத்த மனுவில் “மத்திய அரசின் மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் பணிபுரியும் பெண்களை அரசு திட்ட வேலைகளுக்கு அழைத்து செல்லாமல், ஸ்டெர்லைட் நிர்வாகத்துக்கு தூய்மை பணிக்கு அழைத்து சென்று உள்ளனர். மேலும் சட்டம், ஒழுங்கை சீர்குலைக்கும் வகையில் செயல்படும் ஸ்டெர்லைட் நிர்வாகத்தினர் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கூறி உள்ளனர்.
இந்த சம்பவங்களால் கலெக்டர் அலுவலகம் முன் ஏராளமான போலீசார் பாதுகாப்புக்கு குவிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதில் சில போலீசார் கவச உடை அணிந்து இருந்தனர்.
Related Tags :
Next Story